நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 10 ஜூன், 2013

காலித் முஜாஹித், தாரிக் காஸ்மி கைது!: போலீஸின் பொய் மூட்டைகளை தோலுரித்துக் காட்டும் நிமேஷ் கமிஷன் அறிக்கை!


உத்தரபிரதேச மாநிலத்தில் 2007-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டி, காலித் முஜாஹித், தாரிக் காஸ்மி ஆகியோரை எஸ்.டி.எஃப் (ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ்) கைது செய்தது.இக்கைது சம்பவத்தில் மர்மங்கள் நிறைந்திருப்பதை வெட்ட வெளிச்சமாக்கும் நிமேஷ் கமிஷனின் அறிக்கை வெளியாகியுள்ளது.காலித் முஜாஹிதையும், தாரிக் காஸ்மியையும் பொய் வழக்கில் சிக்கவைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நேற்று முன் தினம் உ.பி மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிமேஷ் கமிஷன் கூறுகிறது. நிமேஷ் கமிஷனின் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
 
ஃபைஸாபாத், லக்னோ, கோரக்பூர் ஆகிய இடங்களில் 2007-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் காலித் முஜாஹித் மற்றும் தாரிக் காஸ்மிக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டி பாரபங்கி ரெயில்வே நிலையத்தில் வைத்து கைது செய்ததாக எஸ்.டி.எஃப் கூறியது. இவர்களிடமிருந்து வெடிப்பொருட்களை கைப்பற்றியதாகவும் எஸ்.டி.எஃப் தெரிவித்தது. ஆனால், கைது செய்ததாக கூறப்படும் தேதிக்கு முன்பே இருவரையும் எஸ்.டி.எஃப் காவலில் எடுத்ததாக நிமேஷ் கமிஷன் கண்டறிந்தள்ளது.


போலீஸ் குறிப்பிடும் சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டோர், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரின் வாக்குமூலங்களை பதிவுச் செய்த நிமேஷ் கமிஷன், விசாரணை அறிக்கையை தயார் செய்ய நான்கு ஆண்டுகளை செலவழித்துள்ளது.

முதல் தகவல் அறிக்கையுடன்(எஃப்.ஐ.ஆர்) போலீஸின் வாதங்கள் முரண்படுவதாக நிமேஷ் கமிஷன் கூறுகிறது. கைதை பதிவு செய்வதற்கு சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் தங்களை கடத்திச் சென்றதாக காலிதும், தாரிக் காஸ்மியும் நிமேஷ் கமிஷனிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

2007 டிசம்பர் 12-ஆம் தேதி ஆஸம்கரில் க்ளீனிக்கை நடத்தி வந்த யுனானி மருத்துவரான தன்னை, மர்ம நபர்கள் கடத்திச் சென்றதாக தாரிக் காஸ்மி வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆஸம்கரில் டிசம்பர் 12-ஆம் தேதி தாரிக் காஸ்மி போனை உபயோகித்தார் என்பதை கால்(அழைப்பு) பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், 13,17,18,19,20 ஆகிய தினங்களில் ஃபோன் லக்னோ உள்ளிட்ட வேறு பகுதிகளில் இருந்துள்ளது.

தாரிக்கை கைது செய்து நான்கு தினங்கள் கழிந்து ஜோன்பூரில் மார்க்கெட்டில் வைத்து காலித் முஜாஹித் கைது செய்யப்படுகிறார். இக்கால அளவில் தங்களை சித்திரவதைச் செய்ததாகவும், குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளிக்காவிட்டால் உறவினர்களை ஆபத்தில் சிக்கவைப்போம் என்று மிரட்டியதாகவும் இருவரும் கமிஷனிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இவர்களை கடத்திச் சென்ற தினத்தில் தாரிக்கின் பாட்டனார் அஸ்ஹர் அலியும், காலிதின் தாய் மாமா ஸஹீர் ஆலம் ஃபலாஹியும் போலீசிடம் புகார் அளித்துள்ளனர். ஸஹீர் ஆலம் ஃபலாஹி தேசிய மனித உரிமை கமிஷன், மாநில முதல்வர், டி.ஜி.பி, மாவட்ட மாஜிஸ்ட்ரேட் ஆகியோருக்கும் புகார் அளித்துள்ளார். தாரிக்கின் ஃபோன் அடிக்கடி ஆன் ஆவதாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதனை ட்ரேஸ் செய்ய போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை.

காலித் கைது செய்யப்பட்டாரா? அல்லது கடத்திச் செல்லப்பட்டாரா? என்பதை தெளிவுப் படுத்தக் கோரி ஸஹீர் ஆலம் ஃபலாஹி மதியாவு போலீஸ் நிலையத்தில் உள்ள வட்டார இன்ஸ்பெக்டருக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி மனு அளித்துள்ளார். ஆனால், டிசம்பர் 16-ஆம் தேதி காலித் கைதுச் செய்யப்பட்டார் என்ற பதில் தான் கிடைத்தது.

குற்றவியல் வழக்கு என்பதால் இதர தகவல்களை அளிக்க இயலாது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. 18,19 ஆகிய தினங்களில் காலிதின் வீட்டை சோதனையிட்டு திருக்குர்ஆன் மற்றும் இதர பொருட்களை போலீஸ் வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றது.

காலிதை ஒரு பஸ் டிக்கெட் மற்றும் 16-ஆம் தேதியிட்ட சைக்கிள் ஸ்டாண்ட் கூப்பனுடன் வாரணாசியில் கண்டதாக எஸ்.டி.எஃப் கூறுவதை நிமேஷ் கமிஷன் கடுமையாக விமர்சித்துள்ளது.

டிசம்பர் 16-ஆம் தேதி கடத்திச் செல்லப்பட்ட காலிதை வாரணாசியில் கண்டதாக கூறுவது நியாயமா? என்று கமிஷன் கேள்வி எழுப்பியுள்ளது. கைதை பதிவுச் செய்வதற்கு சில தினங்களுக்கு முன்பே கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் கூறுவது பொய் என்பதை தெளிவுப்படுத்தியுள்ள கமிஷன், வெடிப்பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டது என்பதை கண்டுபிடிக்க வலியுறுத்தியுள்ளது.

இருவரையும் யாரோ கடத்திச் சென்ற செய்தி டிசம்பர் 17-ஆம் தேதி உள்ளுர் பத்திரிகைகளில் வெளியானதை கமிஷன் கண்டுபிடித்துள்ளது.

அதேவேளையில் நிமேஷ் கமிஷன் அறிக்கையில் கூறியுள்ள தெளிவான விபரங்கள் ஏதும் இன்றியே கடந்த மாதம் 3-ஆம் தேதி காலித் மற்றும் தாரிக் காஸ்மி மீதான பொய் வழக்குகளை வாபஸ் பெறக்கோரி பாரபங்கி நீதிமன்றத்தில் உ.பி மாநில அரசு மனு தாக்கல் செய்தது. பொது நலனை காக்கவும், மத நல்லிணக்கத்தை பேணவும் பொய் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்று அரசு மனுவில் குறிப்பிட்டிருந்தது. இதனை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதற்கு பிறகே காலித் முஜாஹித் போலீஸ் காவலில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதற்கு எதிராக எழுந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்தே அரசு நிமேஷ் கமிஷன் அறிக்கையை அங்கீகரித்துள்ளது.

காலிதின் மரணத்திற்கு காரணமானவர்கள் என்று தனது புகாரில் கூறியுள்ள 42 போலீஸ்காரர்களை கைது செய்யவேண்டும் என்று அவரது தாய் மாமா ஸஹீர் ஆலம் ஃபலாஹி வலியுறுத்தியுள்ளார்.