நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 17,19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது.  

17-ந்தேதி நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள், 191 பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள பதவிகளுக்கு ஓட்டுப் பதிவு நடைபெறுகிறது.

2-வது கட்டமாக 19-ந் தேதி நடக்கும் தேர்தலில் 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 பஞ்சாயத்து யூனியன்கள், 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்து பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. 




மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 401 பதவிகளுக்கான மனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் மந்தமாக இருந்த மனு தாக்கல் 26-ந் தேதி சூடு பிடித்தது.

கடைசி நாளான நேற்று மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை உச்ச கட்டத்தை அடைந்தது.

நேற்று ஒரு நாளில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதனால் வேட்பு மனு தாக்கல் செய்யும் மையங்களில் வேட்பாளர்கள் கூட்டம் அலைமோதியது.  

மாநிலம் முழுவதும் மொத்தம் 5 லட்சத்து 27 ஆயிரத்து 14 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மேயர் பதவிக்காக சென்னையில்-64 பேரும், சேலத்தில் 53 பேரும், திருப்பூர் 52 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதுபோல் கோவை-47, மதுரை-44, ஈரோடு-41, தூத்துக்குடி-24, நெல்லை-19, வேலூர்-15 பேர் மனு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவாக 41 ஆயிரத்து 304 பேர் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். 2-வது இடம் வேலூருக்கு கிடைத்துள்ளது. இந்த மாவட்டத்தில் 31 ஆயிரத்து 390 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் 3-வது இடத்தில் இருக்கிறது. இங்கு 28 ஆயிரத்து 674 பேர் போட்டியிட மனு கொடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு 64 பேரும், 200 கவுன்சிலர் பதவிக்கு 3 ஆயிரத்து 445 பேரும் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

சென்னை மாவட்டத்தில் சென்னை மாநகராட்சி மட்டுமே உள்ளது. எனவே மற்ற எல்லா மாவட்டங்களை விட மிக குறைந்த எண்ணிக்கையில் அதாவது 3 ஆயிரத்து 509 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.  

வேட்பு மனு பரிசீலனை இன்று நடந்தது. காலை 11 மணிக்கு இதற்கான பணி தொடங்கியது. சென்னையில் மாநகராட்சி அலுவலகம் உள்பட 35 மையங்களில் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதுபோல அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து பதவிகளுக்கு போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மையங்களிலும் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

முறைப்படி தாக்கல் செய்யப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.   வேட்பு மனுக்களை வாபஸ் பெற 3-ந் தேதி கடைசி நாள். அன்று மாலை வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும் வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்படும்.

அரசியல் கட்சிகளால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் இப்போதே பிரசாரத்தை தொடங்கி விட்டனர். சுயேட்சைகளுக்கு 3-ந் தேதி சின்னம் கிடைக்கும். எனவே அதன் பிறகுதான் பிரச்சாரம் செய்ய முடியும். ஆகவே 3-ந் தேதிக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கும்.