டெல்லி:பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக அவதூறு செய்திகளை பரப்பிய 13 பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மீது பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புகார் செய்துள்ளது.
இதுகுறித்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
“சட்டபூர்வ எச்சரிக்கை நோட்டிஸ் பத்திரிகைகளுக்கு அனுப்பிய பின்பும் முறையான பதிலை தராத காரணத்தால் செய்தி நிறுவனங்களுக்கு எதிராக ஒழுங்கு முறை ஆணையத்தை பாப்புலர் ஃபிரண்ட் அணுக நேர்ந்தது.
நாங்கள் முறையாக சம்பத்தப்பட்ட ஊடகங்களை அவர்கள் அலுவலகத்திலேயே நேரிடையாக சந்தித்து எழுத்துபூர்வமாக எங்களது தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து எங்களுக்கெதிரான அவதூறு செய்திகளை திரும்பப் பெருமாறும் தவறுக்காக வருத்தம் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டோம். துரதிர்ஷ்டவசமாக தவறிழைத்தது மட்டுமின்றி தொடர்ந்து அவர்கள் எங்கள் மீது சேற்றை வாரியிறைக்கும் அவதூறு பிரசாரத்தை அவை நிறுத்திக்கொள்ள தயாரில்லை, மாறாக ஒரு சிலர் நமக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தை தொடர்ந்தனர். திருத்தம் வேண்டி நாம் அனுப்பிய சட்டபூர்வ எச்சரிக்கை நோட்டிஸை கண்டுகொள்ளவில்லை என்ற காரணத்தால்தான் நாங்கள் ப்ரஸ் கவுன்சிலை அணுக நிர்பந்திக்கப்பட்டோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களான பஹர் யு பர்கி மற்றும் மஃரூஃப் அஹ்மத் ஆகியோர் மூலம் இந்தவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வீரியம் குறைந்த சைக்கிள் வெடிகுண்டு சம்பந்தமாக மதுரையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய தமிழ் நாளிதழ்களான மாலைமுரசு, தமிழ்முரசு, தினகரன் மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ஆங்கில நாளிதழ் ஆகியவற்றுக்கு எதிராக போலீஸ் கமிஷனரிடம்மதுரை மாவட்ட பாப்புலர் ஃபிரண்ட் வழக்கு பதிவு செய்துள்ளது என்பதையும் கே.எம் ஷரீஃப் தெரிவித்தார்.