மும்பை:அஸ்ஸாம் கலவரம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன அழித்தொழிப்பு ஆகியவற்றை கண்டித்து ராஸா அகாடமி சார்பாக மும்பை ஆஸாத் மைதானத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இச்சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள். 14 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் மீது போடோ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் மற்றும் மியான்மரில் ராகேன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அரசு உதவியுடன் புத்தர்கள் நடத்தி வரும் இன அழித்தொழிப்பைக் கண்டித்து மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தில் ராஸா அகாடமி என்ற அமைப்பின் சார்பாக போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
முஹம்மது உமர் அன்ஸாரி(வயது 22) என்பவர் பலியானவர்களில் ஒருவர் ஆவார். இன்னொருவர் அடையாளம் காணப்படவில்லை.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து புறநகர் ரெயில் சேவை மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆஸாத் மைதான் வன்முறையைத் தொடர்ந்து மும்பை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் அரூப் பட்நாயக் கூறியது: ‘வன்முறைக்கான காரணம் குறித்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்’ என்றார்.
மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல், அனைவரும் அமைதியாக இருக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். வன்முறை சம்பவம் மேலும் பரவாமல் தடுப்பது குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது தொடர்பாகவும் உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த ராஸா அகாடமியின் பொதுச்செயலாளர் முஹம்மது ஸயீத் கூறியது: ‘இந்த வன்முறைச் சம்பவத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. வன்முறையை நாங்கள் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டோம்’ என்றார்.
வன்முறை உருவாக காரணம் என்ன?
ஆஸாத் மைதானத்தில் நடந்த போராட்டம் முடிந்த பிறகு மைதானத்தை விட்டு வெளியே வந்தவர்கள், ஊடகங்கள் முஸ்லிம் கூட்டுப் படுகொலையை மூடி மறைப்பதாக குற்றம் சாட்டி பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது பத்திரிகையாளர்களுடன் இணைந்து போலீஸ் அவர்களை விரட்ட முயன்றது. இதன் பின்னரே போராட்டத்தில் கலந்துகொண்டோருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் உருவானது.