நாடு முழுவதும் மூன்று மாதங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வெற்றிகரமாக நடத்திய பள்ளி செல்வோம் (ஸ்கூல் சலோ) பிரச்சாரம் நிறைவுற்றது. புதுமையான முறையில் அதிக மக்களை சென்றடையும் விதத்தில் நடத்தப்பட்ட இந்த பிரச்சாரம் மாணவர்கள் மற்றும் பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது.
முன்னதாக செங்கோட்டையில் ஆரம்பம் ஆன ஸ்கூல் சலோ பேரணி |
ஏப்ரல் 25 அன்று டெல்லி செங்கோட்டையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட கண்கவர் பேரணியுடன் இந்த பிரச்சாரம் ஆரம்பமானது. கல்வி கணக்கெடுப்பு, பள்ளிக்கூட சாதனங்கள் வழங்குதல், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தலைசிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதல், படிப்பை விட்ட மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் ஆகியன இந்த பிரச்சாரத்தின் முக்கிய நிகழ்ச்சிகளாக இருந்தன.
இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட இந்த பிரச்சாரத்தில் 3,30,27,000 ரூபாய் மதிப்புள்ள 1,16,595 பள்ளிக்கூட சாதனங்கள் வழங்கப்பட்டன. ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், மணிப்பூர், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய பதினைந்து மாநிலங்களில் இந்த பிரச்சாரம் நடத்தப்பட்டது.
அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடைவதற்கான இயக்கத்தின் முயற்சியின் ஒரு அங்கமாக இந்த வருடம் அதிகமான கிராமங்களில் சர்வ சிக்ஷா கிராம் (முழு கல்வி பெற்ற கிராமம்) திட்டத்தை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட உயர்கல்வி உதவி தொகை மற்றொரு மைல்கல்லாகும். கல்வியில் சிறந்து விளங்கும் பொருளாதார தேவையுடைய மாணவர்களுக்கு இந்த வருடம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் மாணவர்களுக்கு உதவி தொகைகள் வழங்கப்படவுள்ளன.
குழந்தைகளிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து அவற்றை வளர்ப்பதுடன் அந்த குழந்தைகளின் கல்வியிலும் உதவி செய்வதற்கான ஒரு புதிய திட்டத்தை பாப்புலர் ப்ரண்ட் தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்தின் தொடக்கமாக திறமைகளை கண்டறியும் தேர்வு நடத்தப்படும். டெல்லி, கொல்கத்தா மற்றும் முர்ஷிதாபாத்தின் 300 மாணவர்கள் இதனால் பலன் பெறுவார்கள்.
கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுடன் அரசாங்க உதவி தொகைகள், கல்வி உரிமை சட்டம் ஆகியவை குறித்தும் மக்களை அறிய செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. விழிப்புணர்வுயின்மை மற்றும் சிக்கல்கள் நிறைந்த நடைமுறைகள் காரணமாக அரசாங்கம் வழங்கும் சிறுபான்மை கல்வி உதவி தொகைகளை கிராமப்புற மாணவர்களால் பெற இயலவில்லை என்பதை இந்த பிரச்சாரத்தின் மூலம் அறிந்து கொண்டோம். கல்வி உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன பின்னரும் கிராமப்புற கல்வி கட்டமைப்பு திருப்தியை அளிக்கும் விதத்தில் இல்லை என்பதும் தெளிவாக தெரிந்தது.
அஸ்திவாரம் தான் முக்கியமானது என்பதை கருத்தில் கொண்டு அரசாங்கம் அதிகமான பல்கலைக்கழகங்களை நிர்மானிப்பதை விட ஆரம்ப கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது. அரசாங்க அதிகாரிகள், நமது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள், உதவிகளை அளித்தவர்கள் என இந்த பிரச்சாரத்தை மிகப்பெரும் வெற்றியாக மாற்றிய அனைவருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.