நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 19 செப்டம்பர், 2011

வழிகாட்டும் ஒளி விளக்காக இருங்கள்


ஒரு பெண் ஒரு குடும்பத்தைக் கட்டுக்கோப்பாக வழிநடத்த வேண்டுமெனில், அவள் முதலில் தன்னை சிறந்த தாரமாகவும், மதி நுட்பம் நிறைந்த தாயாகவும், அறிவூட்டும் நல் ஆசானாகவும், திட்டமிடும் ஒரு நல் அதிகாரியாகவும், பணிவுள்ள, இறைவிசுவாசமுள்ள ஒரு முன்மாதிரிப் பெண்ணாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும்.


பெண்ணால் கட்டுக்கோப்பாக வழி நடத்தப்படும் இல்லம் சிறப்படைவதையும், பெண்ணின் கட்டுக்கோப்பு தவறிவிடும் இல்லங்கள் பிறர் கவலைப்படும் வகையில் சீர்கெட்டுப் போவதையும் நாம் நடைமுறை வாழ்க்கையில் பார்த்து அனுபவிக்கிறோம். ஒரு மரத்தின் வேர்களுக்கு ஒப்பானவள் பெண். அம்மரத்தை எத்தனை புயல் தாக்கினும் அது அப்புயலை தாங்கி நிற்கும் பூ, இலை, கனி என்பவற்றையும் எவ்வாறு அழிவில் இருந்து காத்து நீரை உறிஞ்சிக் கொடுத்து நிற்கிறதோ அதே போல் ஓர் இல்லாளும் எத்தகைய பிரச்சினை வந்த போதும் அவற்றைச் சமாளித்து தன் இல்லத்தின் ஏனைய உறுப்பினர்களுக்காக தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக இல்லத் தலைவி திட்டமிடல் அடிப்படையில் எதையும் செய்வது சிறந்தது. குறிக்கோள் அற்ற மனிதன் குரங்கைப் போன்றவன் என்று ரஷ்யப் பழமொழி ஒன்று கூறுகிறது. எனவே இல்லாளும் சிறந்த குறிக்கோளை மையமாக வைத்து தனது குடும்பத்தின் ஒவ்வொரு செயற்பாட்டையும் திட்டமிடலின் அடிப்படையில் அமைத்தல் நன்று. இவ்வாறு திட்டமிட்டுக் கொள்ளும் பொழுது வேலைகள் ஒழுங்குற செய்யப்பட்டு நேரம் மீதப்படுத்தப்படுகிறது. பொருளாதார வசதிக்கேற்ப செலவுகளை கூட்டிக் குறைக்கவும், சிறு தொகையை சேமிப்பாகக் கொள்ளவும் முடிகிறது. இதனால் தோன்றும் பாரிய நன்மை யாதெனில் நேரம் மீதப்படுத்தப்பட்டு குடும்ப அங்கத்தவர்களுடனும் இறைவணக்கங்களிலும் அம்மீதி நேரத்தைச் செலவிட ஒரு இல்லாளினால் முடியுமாக இருக்கும் என்பது நடைமுறை உண்மையாகும்.

இதற்கு நாம் அஸ்மா (ரலி) அவர்களின் ஹிஜ்ரத்தின் பொழுது, அவர்கள் இஸ்லாத்திற்குச் செய்த சேவை, அந்த சேவையில் அவர்களின் திட்டமிடல் ஆகியவற்றைக் காணும்பொழுது, இன்றைக்கு இருக்கும் விஞ்ஞான முன்னேற்றத்தில் கூட இந்தளவு திட்டமிடலுடன் நடந்து கொண்டிருக்க முடியுமா என்பது சந்தேகமே!

ஹிஜ்ரத் பயணம் புறப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்கள், அபுபக்கர் (ரலி) அவர்கள் ஆகிய இருவரும் ஹீராக் குகைகயில் இருக்கின்றனர். அவர்கள் ஹீராக் குகையில் தங்கி இருந்த 3 நாட்களுக்கும் உணவு மற்றும் மக்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகளை துப்பறிந்து வந்து சொல்வது ஆகிய பணிகள், அஸ்மா (ரலி) அவர்களுக்கும், அவரது தம்பி அப்துல்லா (ரலி) அவர்களுக்கும் வழங்கப்பட்டது. இன்றைக்கு இருக்கும் போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலச் சூழ்நிலையில், முஹம்மது (ஸல்) அவர்களையும், அவர்களைச் சார்ந்தோர்களையும், மக்கத்துக் குறைஷிகள் கண்இமை கொட்டாமல் கண்காணித்து வருகின்ற அந்தச் சூழ்நிலையில், தினமும் பல மைல்கள் யாருடைய கண்ணிலும் படாமல், மக்காவிலிருந்து ஹிராக் குகைக்கு கால்நடையாகவே சென்று வந்த அவர்கள் துணிவு மற்றும் திட்டமிடலை இன்று நினைத்தாலும், நமக்கு மலைப்பாக இருக்கின்றது.

அதே போல அபுபக்கர் (ரலி) அவர்களது மனைவி, தன்னுடைய கணவர் கொடுத்து வருகின்ற வீட்டுச் செலவுகளுக்கான பணத்தை சிறுகச் சிறுக சேமித்து வருகின்றார். ஒரு நாள் சேமித்த அந்தப் பணத்தைக் கொண்டு நல்ல இனிப்பு பலகாரம் ஒன்றையும் செய்கின்றார். வழக்கத்தை விட தன்னுடைய உணவில் இனிப்பு பரிமாறப்படுவது கண்டு, அது பற்றி வினவிய அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு, தான் சேமித்த பணத்தைக் கொண்டு தான் இந்த இனிப்பைச் செய்தேன் என்று அபுபக்கர் (ரலி) அவர்களின் மனைவி பதிலுரைக்கின்றார்கள்.

அகழ் யுத்தம், தபூக் யுத்தம் போன்ற இஸ்லாத்தின் மிகக் கடுமையான நாட்களில் மிகவும் வறுமையான அந்த நாட்களில், குடும்பத்தின் வருவாயைக் காரணம் காட்டி கணவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்ததின் காரணமாகத் தான், அந்த ஸஹாபாக்களால் இஸ்லாத்தின் எதிர்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய அந்த நேரத்தில் எந்தவித கவலையும் இல்லாமல் இஸ்லாத்திற்காகப் பணியாற்றி முடிந்தது. ஏன்? தங்கள் உயிரையும் தியாகம் செய்ய முடிந்தது.

சிந்தியுங்கள்! செயல்படுங்கள்! சகோதரிகளே!!!!