கெய்ரோ:முற்றிலும் எதிர்பாராத விதமாக இஃவானுல் முஸ்லிமீன் பெரும்பான்மை இடங்களை பெற்றுள்ள பாராளுமன்றத்தை கலைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் மூன்றில் 2 பகுதி இடங்களுக்கு மட்டுமே அரசியல் கட்சிகள் போட்டியிட இயலும் என்ற சட்டம் மீறப்பட்டதாக கூறி மூன்றில் ஒரு பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதியை உச்சநீதிமன்ற ரத்துச் செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அவசரக் கூட்டத்தை கூட்டிய எகிப்து ராணுவ கவுன்சில் நீதிமன்றத்தால் தகுதியிழப்பிற்கு ஆளான பாராளுமன்றத்தை முற்றிலும் கலைப்பதாக அறிவித்தது.
எகிப்தில் இம்மாதம் 16,17 தேதிகளில் நடைபெறவிருக்கும் 2-வது கட்ட அதிபர் தேர்தலில் ஷஃபீக் போட்டியிட சட்டரீதியான தடை இல்லை என்பதை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சி காலத்தில் அரசில் இடம்பெற்றிருந்த நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை ஏற்படுத்த கோரும் சிறப்பு சட்டத்தில் தீர்ப்பளிக்கவே ஷஃபீக்கிற்கு தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த சர்வாதிகாரப் போக்கு மீண்டும் எகிப்தை புரட்சியை நோக்கி தள்ளுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகத்தை சீர்குலைக்கும் பாராளுமன்ற கலைப்பு நடவடிக்கை நாட்டை மீண்டும் இருண்ட யுகத்தில் தள்ளும் என்று இஃவானுல் முஸ்லிமீன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாக்காளர்களின் சுதந்திரத்திற்கு எதிரான சதித்திட்டம் என்று ஸலஃபி கட்சியான அந்நூர் இத்தீர்ப்புக் குறித்து கருத்து தெரிவித்துள்ளது.
சட்டம் மீறப்பட்டதால், பாராளுமன்றத்தை கலைக்கவேண்டி வரும் என தீர்ப்பளிக்கவே முன்னாள் அரசு கவுன்சில் உறுப்பினருமான உச்சநீதிமன்ற நீதிபதி முஹம்மது ஹமாத் அல் ஜமால் மறைமுகமாக தெரிவித்தார்.
1987-ஆம் ஆண்டும், 90-ஆம் ஆண்டும் பாராளுமன்றத்தை கலைக்க முபாரக் அரசு பிரயோகித்த அதே தந்திரத்தை தற்பொழுதைய ராணுவ அரசும் கடைப்பிடித்துள்ளது என்ற உணர்வு மக்களிடையே பரவுவதாக செய்திகள் கூறுகின்றன.