கோவை (அக்டோபர் 19 , 2012) : பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவிற்கு எதிராக அதிகார மையங்கள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொண்டு வரும் அவதூறு, பொய்யான பரப்புரைகளின் போலித்தன்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் " குறி வைக்கப்படும் முஸ்லிம் சமூகம் - நீதிக்கான முழக்கம் " என்ற தலைப்பில் கோவை மண்டல மாநாடு நடைபெறுகின்றது . மக்களை சந்திப்போம் ! உண்மையை சொல்வோம் !! என்ற முழக்கத்தோடு இம்மாநாடு நடைபெறும்.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா ஒடுக்கப்பட்ட சமூகங்களை கல்வி, சமூக மேம்பாடு என அனைத்து தளங்களிலும் சக்திப்படுத்த ஜனநாயக வழிமுறைகளில் போராடும் தேசிய அளவிலான ஒரு மக்கள் பேரியக்கமாகும். ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சக்திபெறுவதை விரும்பாத ஆதிக்க சக்திகள் பாப்புலர் ப்ரண்டிற்கு எதிராக பல அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.
உளவுத்துறையிலும் , காவல்துறையிலும் உள்ள சில வகுப்புவாத சிந்தனையுடைய அதிகாரிகளும், ஒரு சில ஊடகங்களும் இத்தகைய வதந்திகளை பரப்புவதில் தனி அக்கறை காட்டி வருகின்றனர். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கான உரிமைப் போராட்டங்களை சீர்குலைக்கின்றனர். அவதூறுப் பிரச்சாரங்களின் நோக்கம் ஒடுக்கப்பட்ட பிரிவினரை சக்திப்படுத்துவதர்காக பாடுபடும் பாப்புலர் ப்ரண்டிற்கு எதிரான சூழ்ச்சியாகும். இது அரசியல் சாசனம் கூறும் மதச்சார்பற்ற ஜனநாயக விழுமியங்களை மறுப்பதாகும்.
ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திர்க்கு தடைகளை போட முயற்சிக்கும் இத்தகைய அவதூறுகளுக்கு எதிராக அக்டோபர் 10 முதல் நவம்பர் 10 வரை "பாப்புலர் ப்ரண்ட் ஏன்?-மக்களை சந்திப்போம்!உண்மையை சொல்வோம்!!" எனும் முழக்கத்துடன் தேசிய அளவிலான பிரச்சாரத்தை மேற்கொள்ள பாப்புலர் ப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. தேசிய அளவில் இப்பிரச்சாரத்தினை பத்து இலட்சம் (ஒரு மில்லியன்) இந்திய கிராமங்கள் , நகரங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இப்பிரச்சாரம் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளின் விடுதலை மற்றும் மக்கள் விரோத கருப்புச் சட்டங்களான (UAPA ) சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் போன்றவற்றை திரும்ப பெறவும் வலியுறுத்தும்.
இதன் ஒரு பகுதியாக தமிழகம் தழுவிய அளவில் நடந்து வரும் பிரச்சாரத்தில் தெருமுனை பிரச்சாரங்கள், வீடு வீடாக நோட்டீஸ் விநியோகம், போஸ்டர் பிரச்சாரம், ஆட்டோ பிரச்சாரம் ஆகியவற்றின் மூலம் பாப்புலர் ப்ரண்ட் ஆற்றி வரும் பணிகள் பாப்புலர் ப்ரண்டிற்கு எதிரான அவதூறுகளின் பின்னணி போன்றவற்றின் உண்மை நிலை மக்களிடம் எடுத்து சொல்லப்பட்டு வருகின்றது. மேலும் சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று இடங்களில் மண்டல மாநாடுகள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகின்ற 21 .10 .2012 அன்று கோவையில் கோவை மண்டல மாநாடு நடைபெற உள்ளது. போத்தனூர் ரோடு - மைல்கல்லில் பகதூர்ஷா திடலில் வைத்து நடைபெறும் இம்மாநாட்டில் பாப்புலர் ப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் , மாநில தலைவர் ஏ.எஸ் . இஸ்மாயீல் , எஸ்.டிபி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர் முபாரக் , என்.சி.ஹெச்.ஆர். ஓ மாநில தலைவர் வழக்கறிஞர் பவானி பா.மோகன் , பி.யு.சி.எல் துணை தலைவர் க.குறிஞ்சி , ஆல் இந்தியா இமாமஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி. மஹபூப் அன்சாரி பைஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.
நாட்டின் அனைத்து குடிமக்களும் ஜனாநாயக , மதச்சார்பற்ற மற்றும் அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அனுபவிக்கவும் , சமூகத்தில் கீழ் நிலையில் உள்ள மக்களை சக்திப்படுத்திடவும் குறிப்பாக 65 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தினை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு அனைவரும் பேராதரவு தர வேண்டும்.
இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் கோவை மண்டல மாநாட்டிற்கு அலைகடலென திரண்டு வந்து நீதிக்கான முழக்க வரலாற்றில் நீங்கா இடம்பெற வேண்டுமென பாப்புலர் ப்ரண்ட் அழைப்பு விடுக்கின்றது.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாப்புலர் ப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் இபுராஹீம் , கோவை மாவட்ட தலைவர் ராஜா உசேன் மாவட்ட செயலாளர் ஹக்கீம் ஆகியோர் உடன் இருந்தனர்