நாட்டினுடைய வள ஆதாரங்களையும், நிதியாதாரங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, சமூக-பொருளாதார வளர்ச்சியை ஒன்றிணைத்து, பல மக்கள் நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்தும் முறையைத்தான் "திட்டம்' என்று குறிப்பிடுகிறார்கள். முதன் முதலாக பொதுவுடைமைக் கட்சியினுடைய ஆட்சி 1917-ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தில் அமைந்தபோது வேளாண்துறை, தொழில்துறைகள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தன. நாட்டின் பல பகுதிகளில் இருந்த ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கும், வளர்ச்சியை விரைவுப்படுத்துவதற்கும் திட்டமிட்டு முன்னேறுகிற ஒரு அமைப்பு தேவை என சமதர்மச் சிற்பியான லெனின் அவர்கள்தான் திட்டமிடல் முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். திட்டமிடல் கொள்கையால் சோவியத் ஒன்றியம் மிக குறுகிய காலத்தில் விரைவான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றது. இதற்கு பின்னர் "திட்டம்' பற்றிய கருத்துகள் உலகளவில் செல்வாக்குப் பெற்றன.
1930-ஆம் ஆண்டுகளில் தனது தந்தை மோதிலால் நேருவுடன் சோவியத் பயணம் மேற்கொண்ட ஜவகர்லால் நேரு, திட்டமிடல் கொள்கை வெற்றி பெற்று வருவதை அறிந்து, இக்கொள்கையை இந்தியா பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் மாநாடுகளில் வலியுறுத்தினார். நேதாஜி போன்ற பல முன்னணித் தலைவர்கள் இக்கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே காங்கிரஸ் இயக்கமும் அதன் தலைவர்களும், பல தொழில்முனைவோரும் பல்வேறு திட்ட அறிக்கைகளை உருவாக்கினர்; மக்கள் மன்றத்தில் கருத்துப் பரிமாற்றத் திற்கு முன்வைத்தனர்.
பிரிட்டிஷ் அரசால் நியமனம் செய்யப்பட்ட, அமைச்சரவைத் தூதுக் குழுவிடம் (Cabinet Mission) இந்திய விடுதலையைப் பற்றி கருத்துகளை முன்மொழிந்த காலகட்டத்தில், திட்டமிடல் கொள்கையை மத்திய அரசுப் பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். மூன்று முறை இக்கோரிக்கையை அமைச்சரவைத் தூதுக்குழு ஏற்க மறுத்தது. இந்திய அரசமைப்பு அவையில் திட்டமிடல் கொள்கையைப்பற்றி, விரிவான முறையில் கருத்துகளும் முன்வைக்கப்படவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சமூக, பொருளாதாரத் திட்டமிடல் கொள்கை (Economic and Social Planning) பொதுப்பட்டியலில் 20-ஆம் இனத்தில்தான் இணைக்கப்பட்டது. இன்றும் இந்நிலைதான் தொடர்கிறது.
இவ்வகைப் பின்னணி ஒருபுறம் இருக்க 1950-ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பிரதமர் நேருவால் நிறைவேற்றப்பட்ட நாடாளுமன்றத் தீர்மானத்தின் வழியாக மத்திய திட்டக்குழு உருவாக்கப்பட்டது.
சமூக-பொருளாதார முன்னேற்றம் தொடர்பான பெரும்பாலான அதிகாரங்கள் மாநிலப்பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், மத்திய திட்டக்குழுவின் முடிவுகளே மாநில அரசின் பொருளாதாரக் கொள்கையாக ஏற்றுக் கொள்கின்ற சூழல் 1967 வரை இந்தியாவில் நீடித்தது. மத்தியிலும், மாநிலங்களிலும் பிளவுபடாத காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்ததே இதற்கு முதன்மையான காரணமாகும். முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்கள் மத்திய அரசிலும் மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி புரிந்த காலத்தில் நிறைவேற்றப்பட்டதால், தில்லியில் அதிகாரக் குவியல் மேலும் ஊக்குவிக்கப்பட்டது. கூட்டாட்சி இயலுக்கு எதிரான பல பொருளாதார-நிதி முடிவுகள் மேற் கொள்ளப் பட்டன. பிரதமர் நேரு காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரக்குவியலின் சின்னமாகவே காட்சியளித்தார்.
முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களில் மாநிலங் களுக்கு திட்ட நிதி ஒதுக்குவதில் எவ்விதப் பொருளாதார, நிதியியல் சார்ந்த வரையறைகளும் உருவாக்கப்படவில்லை. முதல் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களை விமர்சனம் செய்த மராட்டிய மாநிலத்தின் புகழ்மிக்கப் பொருளாதாரப் பேராசிரியர் காட்கில் அவர்கள் திட்டக்குழுவின் துணைத் தலைவராகப் பதவியேற்றபின் ஒரு நிதியியல் சார்ந்த வரையறையை (Gadgil Formula) உருவாக்கினார். மாநிலங்களின் மக்கள்தொகை அளவு, மாநிலங்களின் நிலப்பரப்பு, திரட்டும் வரி வருவாய் அளவு, மாநிலங்களுக்கே உரித்தான சில குறிப்பிட்ட பிரச்சினைகள், பின்தங்கிய நிலைமை போன்ற குறியீடுகள் இவ்வரையறையில் சேர்க்கப்பட்டன.
1990-க்குப் பிறகு தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கையை இந்தியா ஏற்றுக்கொண்ட பின்னர், நேரு காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கலப்புப் பொருளாதாரக் கொள்கையும், பொதுத்துறைக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமையும் சோசலிச சமுதாய நோக்கும் கைவிடப்பட்டன. தனியார் துறையை ஊக்குவிக்கும் முகவராக மாறி சந்தைப் பொருளாதாரத்தின் அடையாள மாகவே மத்திய அரசின் திட்டக்குழு மாறிவிட்டது. மாநிலத் திட்டங்களுக்கு ஆண்டுதோறும் ஒப்புதல் அளிக்கும் ஒரு சடங்கை மட்டும் திட்டக்குழு நிறைவேற்றி வருகிறது. மாநில அரசுகள் பின்பற்றி வரும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல், பல நிபந்தனைகளை விதித்தல் போன்ற மேலாதிக்கப் பணிகளை மட்டும் மத்திய திட்டக்குழு இன்றும் கடைப்பிடிக்கிறது.
எனவே, மத்திய அரசின் திட்டக்குழு அமைந்ததின் நோக்கம் தற்போது மாறிவிட்டது. செயல்பாடும் பயனற்றதாகிவிட்டது. மாநிலங்கள் தங்கள் திட்டங்களைத் தாங்களே உருவாக்கி செயல்படுவதற்கு மத்திய திட்டக்குழு பல தடை களைத்தான் ஏற்படுத்தி வருகிறது.
மாநிலங்களுக்கு அளிக்கும் நிதிப்பகிர்வினை நிதிக்குழு, திட்டக்குழு ஆகிய இரண்டு அமைப்புகள் வாயிலாக மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பொருளாதார, பொது நிதியில் நூல்களில் எங்கும் குறிப்பிடப்படாத, திட்டம் சார்ந்த செலவு (Plan Assistance) திட்டம் சாராத செலவு (Non-Plan Assistance) ) என்ற செயற்கையான பகுப்புமுறையை இந்திய நாடு மட்டும்தான் கடைப்பிடித்து வருகிறது. இவ்வகைப் பகுப்புமுறையும் மத்திய அரசின் மேலாதிக்கத்தை நிலைபெறச் செய்வதற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. திட்டம் சார்ந்த செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலும் உலகில் எந்த கூட்டாட்சி நாட்டிலும் காணப்படாத ஒரு நடைமுறை பின்பற்றப்படுகிறது. மேலும், திட்டக்குழுவால் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் நிதியில் (Plan Assistance) 70 விழுக்காடு கடனாகவும், 30 விழுக்காடு மானியமாகவும் வழங்கப்பட்டன. 12-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு மாநிலங்களுக்குக் கடன் வழங்கும் முறையையும் மத்திய அரசு நிறுத்திக் கொண்டது. மத்திய அரசு வழங்கி வந்த கடனைச் சந்தையில் வாங்கிக் கொள்ளலாம் என்ற முறையை நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டது. இருப்பினும், மாநில அரசுகள் ஏற்கனவே மத்திய அரசிடம் கடன்பட்ட தொகைக்குப் பொறுப்பேற்க வேண்டிய சுமையும் உள்ளது. 12-ஆவது நிதிக்குழு மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களின் ஒட்டுமொத்த மாநில வருமானத்தில் (GSDP) 3 விழுக்காட்டிற்கு மேல் நிதியாக்கப் பற்றாக்குறை (Fiscal Deficit) இருக்கக்கூடாது என்ற விதியையும் பிறப்பித்தது. நிதியாக்கப் பற்றாக்குறை, மாநிலங்கள் வாங்கும் கடனின் அளவைப் பொறுத்துதான் அமைகிறது.
இன்றியமையாதத் திட்டங்களுக்கும், இயற்கைச் சீற்றம் போன்ற எதிர்பாராத சூழலில் இன்றியமையாத பொதுச் செலவினை மேற்கொள்வதற்கும் மாநிலங்களுக்கு இருந்த ஒரே வழி கடனைப் பெறுவதுதான். இந்தக் கடன் கருவியை யும் மாநில அரசுகள் பயன்படுத்துவதற்கு மத்திய அரசால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. காரணம், நிதியியல் பொறுப்புரிமை சட்டத்தின் (Fiscal Responsibility Act) விதி களின்படி, மாநில அரசு, நிதியாக்கப் பற்றாக்குறையை 3 விழுக்காட்டு எல்லைக்குள் வைத்திருந்தால்தான் நிதிக் குழு அளிக்கும் பிற சலுகைகளைப் பெறமுடியும். இவ்வகைக் கட்டுப்பாட்டின் காரணமாக, மாநில அரசுகள் தங்களுடைய நிதிநிலை அறிக்கைகளில் 3 விழுக்காட்டிற்குள் நிதிப் பற்றாக்குறையை காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. சான்றாக, நிதித்திறன் மிக்க தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் சிறுசேமிப்புத் திட்டங்களைச் சிறப்புடன் நிறைவேற்றி வருகின்றன. சிறுசேமிப்புத் திட்டத்தின் வழியாக மக்களிடம் பெற்ற இந்த சேமிப்புத் தொகைக்கு வட்டியாக 9 விழுக்காடு வரை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்கிறது. சிறுசேமிப்புத் திட்டத்தின் வழியாக அதிக அளவு கடன்களை தமிழ்நாடு பெற்றாலும், 3 விழுக்காட்டிற்கு மேல் நிதியாக்கப் பற்றாக்குறை இருக்கக் கூடாது என்ற விதியின் காரணமாக, 3 விழுக்காட்டிற்கு மேல் வரும் கடன் தொகையை (சிறுசேமிப்புப் பத்திரங்கள் வழியாக வரும் தொகை) மைய வங்கியின், கருவூல நிதியில் (Treasury Bill) மத்திய அரசின் பத்திரத்தில், 8 விழுக் காட்டு வட்டிக்குக் குறைவாக அளித்திட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சிறுசேமிப்புப் பத்திரத்தை வாங்குவோர்க்கு மாநில அரசு 9 விழுக்காடு வட்டியைத் தனது நிதியில் இருந்து கொடுப்பதால், ஒரு விழுக்காடு அளவிற்கு மேல் நிதிச்சுமையை மாநில அரசு ஏற்க வேண்டிய சூழல் உருவாகிறது. மேலும், இவ்வித வட்டித் தொகையின் வழியாக மத்திய அரசிற்கு மாநில அரசு தனது நிதியை வழங்கும் நிலையில் உள்ளது. ஒரு புது வகையான மன்னர் காலத்துக் கப்பம் கட்டும் முறையைப் போன்ற நிதி உறவு முறையை மத்திய அரசு ஏற்படுத்துகிறது. இவ்வாறாக, மாநில அரசிற்கு திட்ட உதவி என்ற பெயரில் 70 விழுக்காடு கடனை அளித்து வந்த மத்திய அரசு தனது கடன் கொடுக்கும் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு, மாநில அரசுகளைச் சந்தையில் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளி விட்டது. எனவே, மாநிலங்களுக்கு அளித்த திட்ட உதவியில், 70 விழுக்காடு அளவிற்குச் செயலற்றதாகிவிட்டது. 30 விழுக்காடு நிதியை ஆண்டுதோறும் மாநில அரசுகள் பெறுவதற்காக மத்திய அரசின் திட்டக்குழு தேவையா? என்ற வினாவும் எழுந்துள்ளது.
எனவேதான் இந்தியாவில் மட்டும் காணப்படுகிற திட்டம், திட்டம் சாராத செலவு (Plan and Non-Plan expenditure) என்ற கருத்துரைகள் மீது கடுமையான விமர்சனங்களை நிதி வல்லுநர்கள் முன் வைக்கின்றனர். இவ்வித அணுகுமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.