கொக்ராஜர்(அஸ்ஸாம்): அஸ்ஸாம் மாநிலம் கொக்ராஜர் மாவட்டத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் பலியானார்கள். 15 பேர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார்.
இதனைத்தொடர்ந்து அங்கு அமைதியை ஏற்படுத்த ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சனிக்கிழமை பகல் 12 மணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் கொக்ராஜர் மாவட்டம் ஜாய்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு போடோ லிபரேசன் டைகர்ஸ்(பி.எல்.டி) அமைப்பைச் சார்ந்த 4 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் விதமாக கொக்ராஜர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட துரமரி பகுதியில் நேற்று காலை போடோ வன்முறையாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டனர். 14 வயதான ஷாகிர் அலி கல்வீசிக் கொலைச் செய்யப்பட்டார். 60 வயதான ஷஹதத் ஹுஸைன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். கோதல்துகா பகுதியில் 4 பேர் காயமடைந்தனர்.
அதேபோல், பரோரா பகுதியில் ஒரு பெண் உள்பட 3- பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 7- பேர் காயமடைந்தனர்.
மாநில அரசு சார்பில், இறந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அமைதி காக்கும்படி, முதல்வர் தருண் கோகாய் வலியுறுத்தி உள்ளார்.
போடோ பிரிவினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக நடந்த அரசியல் சதித்திட்டமே இந்த வன்முறை என்று போடோலாண்ட் டெரிட்டோரியல் கவுன்சில் தலைவர் ஹக்ரமா முஹிலரி தெரிவித்தார்.
போடோ மற்றும் இதர சமூகத்தினரிடையே நல்லிணக்கம் நிலவ அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என கோரி இரு பிரிவு தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.