நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

சுதந்திர போராட்ட வீரர் தளபதி திருப்பூர் மொய்தீன்


பதவி பேறுகள் எதுவும் இல்லாமலே முப்பத்தைந்து ஆண்டுகள் தன்னலமற்ற அரசியற் பணி புரிவது என்பது அரசியல் உலகில் ஒரு அற்புத விந்தையாகும்.அந்த விந்தையை காரிய சாதனையாக இயற்றி நம் மத்தியில் வாழ்ந்து மறைந்தவர் திருப்பூர் மொய்தீன். அவர் தமிழ்நாடு முஸ்லீம் லீக் துணை தலைவராகவும், சிறந்த பேச்சாளராகவும், வீர வாள் பரிசு பெற்ற தளபதியாகவும் விளங்கினார்.


தளபதி மொய்தீன் அவர்களுடைய அரசியல் வாழ்வு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பரந்துபட்டதாகும். "கொடி காத்த குமரன்" என்று இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழரின் வீரத்திற்கு இலக்கணமாக விளைந்த திருப்பூர் குமரனும், திருப்பூர் மொய்தீன் அவர்களும் ஒரே ஊரவர்கள் மட்டும் அல்ல. ஒன்றாக அரசியல் என்னும் வேள்வி குண்டத்திலே குதித்தவர்கள். அந்நிய நாட்டு துணி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்டு இருவரும் அரசியல் அரங்கில் அடியெடுத்து வைத்தார்கள். இந்த எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு அங்கமாக கிளைத்த ரயில் வண்டி மறியலிலும் இருவரும் ஒன்றாகவே செயலில் இறங்கினர்.

மறியல் போராட்டம் அன்று விடியற் காலை 8.30 மணிக்கு ரயில் வண்டியின் முன்னர் படுத்து திருப்பூர் மொய்தீன் அவர்கள் மறியல் செய்தார்கள். இதுவே மறியல் இயக்கத்தின் தொடக்கம். உடனேயே அவர் போலீஸ் சாரால் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து சரியாக காலை 8.45 மணிக்கு திருப்பூர் குமரனும் ரயில் முன் படுத்து மறியல் செய்தார். காவல் துறையினரின் தடியடிக்கு மத்தியிலும் சுதந்திர கொடியின் மானத்தை காத்தார். அமரரானார்.

சுதந்திர போராட்ட காலத்தில், தமிழ்நாட்டு அரசியலில் மூத்த தளபதி என அழைக்கப்பட்ட பட்டுகோட்டை சிங்கம் அழகிரிசாமி அவர்கள் அன்று நடைபெற்ற அரசியற் கூட்டத்தில் ஒரு திருப்பூர் குமரனுக்கு ஈடாக எமக்கு ஒரு திருப்பூர் மொய்தீன் கிடைத்து இருக்கின்றார். குமரனின் பணியை மொய்தீன் தொடருவார். என குறிப்பிட்டார். அழகிரிசாமி அவர்களின் கணிப்பு சற்றும் பிசகவில்லை. மொய்தீன் அவர்களின் பணி அவ்வாறே அமைந்து இருந்தது.

மொய்தீன் அவர்கள் நாவன்மை மிக்க பேச்சாளர் ஆவார். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் தம் சிம்ம குரலால் இயக்க எழுச்சியை ஊட்டினார். ஆங்கில கல்வி மூலம் பட்டம் பெற்றவர்களும் தெளிவுபடுத்த முடியாத சிக்கலான அரசியற் பிரச்சினைகளை எல்லாம் தமக்கே உரிய கம்பீர தொனியில் கேட்போர் நெஞ்சை ஈர்க்கும் வகையில் விளக்க வல்ல ஆற்றல் பெற்று விளங்கினார். தான் தோன்றி தலைமை தனத்தை வெறுத்தவர். இயக்க ரீதியான கட்டுபாடுகளுக்கு பணியும் பண்பு உடையவர். சமுதாய பணியையே வாழ்கையின் லட்சியமாக வரித்து கொண்டவர்.

தேசிய போராட்ட காலங்களிலும் சரி, முஸ்லீம் லீகின் அரசியற் பணிகளிலும் சரி மொய்தீன் அவர்களின் தொண்டு தனித்துவ முத்திரை பெற்று திகழ்ந்தது. லீகிற்குள் மிதவாத கொள்கைக்கு மாறுபட்ட தீவிர செயற் போக்கினை ஆதரித்தவர். மக்களுடன் மக்களாக வாழ்ந்து, மக்களுடைய துன்பங்களையும் துயரங்களையும் தெளிவாக உணர்ந்து இருந்தார். இதனால் மொய்தீன் அவர்கள் இடதுசாரி அரசியல்வாதி என்றும் அழைக்கபட்டார்.

மொய்தீன் அவர்களுடைய இந்த தனித்துவ போக்கு 1941 ஆம் ஆண்டிலேயே தூலமாக தெரிந்தது. அவ்வாண்டில் முஸ்லீம் லீகின் தலைமை பதவிக்கு ஜனாப் அப்துல் ஹமீது அவர்களும், கா ஈ தே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களும் போட்டியிட்டனர். அப்துல் ஹமிது இடதுசாரி மனப்பான்மை உள்ளவர் அல்ல. எனினும் மிதவாதி அல்லர். இதன் காரணமாக மொய்தீன் அவர்கள் அப்துல் ஹமீது அவர்களை ஆதரித்தார். அதன் விளைவாக தான் இன்று மொய்தீன் அனுபவிக்கிறார் என்று அவருடைய அரசியல் வாழ்வை கூர்ந்து கவனித்தவர்கள் அபிபிராயபட்டதாகும்.

மொய்தீன் அவர்கள் பணி பயன் பற்றட்டது. பிரிக்கப்பட்ட இந்தியாவில் முஸ்லிம் லீக் சிறிது காலம் செயற் படாமல் இருந்தது. அப்பொழுது கூட மொய்தீன் அவர்களின் பணி பட்டி தொட்டி எல்லாம் தொட்டு பரவியது.

அவருடைய கலப்பற்ற தொண்டு மனப்பான்மையும் , சீரிய நாவன்மையும், பிரிக்கப்பட்ட இந்தியாவில் முஸ்லிம் லீக் முறையாக செயற்படத் தொடங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, காயல்பட்டினம் தொல்குடியில் உள்ள மக்கள் மொய்தீன் அவர்களின் சமுதாய பணிகளை பாராட்டி கவுரவித்தனர் என்பது குறிப்பிடத்தகது. 1954 ஆம் ஆண்டில் இதற்காக காயல்பட்டிணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட விழாவிலே அவருக்கு வீரவாள் வழங்கபெற்றது. தளபதி என்ற பெயரும் சூட்ட பெற்றது.