பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் நடந்து 5 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் ஜாமிஆ மில்லியா பல்கலைக் கழகம் நோக்கி பேரணி நடத்தினர்.முஸ்லிம் வேட்டையை நிறுத்துங்கள்! அரச பயங்கரவாதத்தை நிறுத்துங்கள்! உள்ளிட்ட முழக்கங்களை பேரணியில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.
பேரணிக்கு தலைமை வகித்த கேம்பஸ் ஃப்ரண்டின் தலைவர் அப்துல் நாஸர் கூறும்போது; ‘பாட்லா ஹவுஸ் சம்பவத்தில் சுதந்திரமான விசாரணையை நடத்த மத்திய அரசு முன்வரவேண்டும். சுதந்திரமான விசாரணைக்கு காங்கிரஸ் ஏன் அஞ்சுகிறது?
முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போலீசுக்கு நற்சான்றிதழ் வழங்கினாலும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் இந்த என்கவுண்டரின் நேர்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இவ்விவகாரத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. விசாரணை நடத்தி சந்தேகங்களை தீர்க்க வேண்டாமா? பாட்லா ஹவுஸ் சம்பவத்தில் விசாரணை நடத்தாவிட்டால் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்பதற்கு ஒரு காரணமாக அது மாறிவிடும்.’ இவ்வாறு அப்துல் நாஸர் கூறினார்.
‘தீவிரவாத வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களை பொய்யாக சிக்க வைப்பது ஏராளமான சம்பவங்களின் மூலம் நிரூபணமாகியுள்ளது.’ என்று கேம்பஸ் ஃப்ரண்டின் அனீஸுஸ்ஸமான் தனது உரையில் கூறினார்.