நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 8 நவம்பர், 2011

கூடங்குளம்:பாதுகாப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட எதிர்ப்பாளர்கள் கோரிக்கை


09k.jpg.crop_display
திருநெல்வேலி :  தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றுள்ளது. அணுமின்நிலையத்தின் நிலையை குறித்த அறிக்கை உள்பட ஏராளமான கோரிக்கைகளை நிபுணர் குழுவிடம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உள்ளூர் மக்கள் வைத்துள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்தி அறிக்கை அளிக்க மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் குழு செவ்வாய்க்கிழமை காலை திருநெல்வேலி வந்தது.
சர்வதேச கடல்சார் ஆணைய துணைத் தலைவரும், சுற்றுச்சூழல், இயந்திரவியல் துறை நிபுணருமான ஏ.இ.முத்துநாயகம் தலைமையிலான அக்குழுவினர், மாநில அரசுக் குழுவினருடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
திருநெல்வேலி ஆட்சியர் இரா. செல்வராஜ் தலைமையிலான மாநிலக் குழுவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த புஷ்பராயன், மைபா ஜேசுராஜன், அணுஉலைக்கு எதிரான மற்றொரு குழுவைச் சேர்ந்த தங்கராஜ் ஆகிய 5 பேர் கலந்துகொண்டனர். இக் குழுவில் இடம்பெற்றிருந்த ஆயர் இவோன் அம்புரோஸ் பங்கேற்கவில்லை.
காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் ஆட்சியர் செல்வராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதரி, அதிகாரிகளுடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். பின்னர் 11.30 மணிக்கு மாநிலக் குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற உறுப்பினர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் மத்திய மாநில நிபுணர் குழுவினர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர்.அப்பொழுது அவர்கள் பேச்சு வார்த்தை திருப்தி அளிப்பதாக தெரிவித்தனர்.
மத்தியக் குழுவின் தலைவர் முத்துநாயகம் கூறியதாவது:
மத்திய அரசு அமைத்துள்ள குழு சுதந்திரமான குழு. அணு உலை பற்றிய விவரங்களைத் தெரிந்துகொண்டு, மக்களின் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் நலன், நாட்டின் நலன் இரண்டுமே எங்களுக்கு முக்கியம்.முதல் கட்டப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்தது. மாநில அரசுக் குழுவின் பிரதிநிதிகள் பல்வேறு விளக்கங்களைக் கேட்டுள்ளனர். அதுபற்றிய தகவல் எங்களிடம் இப்போது இல்லை. கூடங்குளம் அணு உலையைப் பார்வையிடுவோம். போராட்டக் குழு பிரதிநிதிகள் கேட்ட விளக்கங்களுக்கான பதிலை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவோம்.
அதுபோல் அணுஉலைப் பாதுகாப்பு குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவரம் கேட்போம். அதைத் தொடர்ந்து மீண்டும் மாநிலக் குழு பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவோம். அடுத்த 10 நாள்களுக்குள் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளது.
அணு உலைப் பிரச்னை தொடர்பாக யார் வந்து சந்தித்தாலும் அவர்களுடன் பேசத் தயாராக உள்ளோம். எல்லோருடனும் சேர்ந்து இந்தப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு ஏற்பட முழு அளவில் முயல்வோம். அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களுக்குத் தெரிந்தவரை கூடங்குளத்தில் பணிகள் நடைபெறவில்லை. ஆனால், பராமரிப்புப் பணி நடைபெறலாம். அது தவிர்க்க முடியாதது என்றார்.
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த புஷ்பராயன் கூறுகையில், முதல் கட்டப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்தது. இது எங்களுக்குத் திருப்தி அளிக்கிறது.
போராட்டம் நடத்திவரும் மக்களின் அச்சத்தையும், கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் என்பதே மக்களின் ஒரே நோக்கம் என்பதையும் மத்திய நிபுணர் குழுவிடம் தெரிவித்தோம் என்றார்.
அணுமின் நிலையத்தை நிறுவ கூடங்குளத்தை தேர்வுச்செய்தது குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை குறித்தும் உள்பட ஏராளமான ஆவணங்களை அணுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டோர் கேட்டுள்ளனர். இதுத்தொடர்பாக 50 கேள்விகள் அடங்கிய மனுவை நிபுணர் குழுவினருக்கு அளித்துள்ளதாக அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் புஷ்பராயன் மற்றும் யேசுராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.ஆவணங்கள் கிடைக்காமல் பேச்சுவார்த்தை நடத்த முடியாது எனவும், தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன் தொடர்புடைய ஆவணங்களையும்
அளிக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவும் சூழலில் அதனைக்குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னர் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் கூடங்குளம் அணுமின்நிலையம் சென்று உள்ளூர் வாசிகளின் அச்சத்தை போக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் இப்பகுதியின் வளர்ச்சிக்கு 200 கோடி ரூபாய் திட்டத்தையும் அப்துல் கலாம் பரிந்துரைத்திருந்தார்.