நெல்லை மாவட்டம் மேலப்பாளைத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்ள் கைது
செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தக்வா
பள்ளிவாசல் வளாகத்தில் கஞ்சி மற்றும் சஹர் நேர சமையல்களை செய்து வந்த RSK
ரஹ்மான் சமையல் குழுவைச் சார்ந்த காட்டு தெருவில் வசித்து வரும் பிலால்
என்ற அப்பாவி இளைஞரை சமையல் செய்து கொண்டிருந்த போது காவல்துறையினர்
நள்ளிரவு 1.15 மணியளவில் அடித்து இழுத்து சென்றனர். நேற்றைய தினத்தில் சஹர்
நேர உணவின் தேவை அதிகமாக இருந்ததால் இவர் சமையல் கூடத்தில் சமைத்துக்
கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினர் அனைவரும் ஃபஜர் தொழுகையை தொடர்ந்து தக்வா பள்ளி வளாகாத்தில் ஒன்றுகூடி இஸ்லாமிய கூட்டமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளாராகிய K.S.ஷாகுல் ஹமீது உஸ்மானி அவர்களின் தலைமையில் சுமார் 5.30 மணியளவில் மேலப்பாளையம் காவல்நிலையத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டு காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதில் பாப்புலர் ஃப்ரண்ட், SDPI கட்சி, தக்வா ஜமாத், தமுமுக, மமக, மமமுக மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காவல்நிலையத்தில் ஆய்வாளர் ஜெயசேகரன் அவர்களுடன் கைது சம்பந்தமாக நடத்திய பேச்சு வார்த்தையில், காவல்நிலையத்தின் தகவல்களுக்கு அப்பாற்பட்டு இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளதாகவும், இது சம்பந்தமாக இன்று காலை 10 மணிக்கு கமிஷனர் அவர்களிடம் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறிய உத்திரவாதத்தின் பெயரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
அதிகாலை நேரத்தில் நடந்த இந்நிகழ்வின் போது மஸ்ஜிதுர் ரஹ்மானில் இருந்து காவல்நிலையம் வரையிலும் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோரின் ஒரு பெரும் கூட்டத்தால் மேலப்பாளையம் பரபரப்பாக காணப்பட்டது.