சென்னை : பாரதீய பண்பாட்டை வாய்கிழிய பேசும் பா.ஜ.கவின் கர்நாடகா மாநில அமைச்சர்களின் ஒழுக்கச்சீரழிவு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் தமிழ சட்ட சபையில் மொபைல் ஃபோனுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவு, புதன்கிழமை நடைபெற்ற அவைக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
எம்.எல்.ஏ.க்கள் அவசரமாக தொலைபேசி பேச வேண்டுமென்றால், பேரவை ‘லாபி’யில் பொதுத் தொலைபேசிகளை வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கர்நாடக சட்டப் பேரவையில் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாகக் கூறப்படும் சம்பவத்தின் காரணமாக, மாநிலத்தின் பா.ஜ.க அமைச்சர்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தமிழக சட்டப் பேரவையில் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சட்டப் பேரவை சார்பில் விதிகள் மற்றும் நடவடிக்கைகளை எடுக்க தனித்தனியாக குழுக்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது அவைக்குழு. அவையில் எம்.எல்.ஏ.க்களுக்கு என்னென்ன தேவைகள், அவற்றை எப்படி நிறைவேற்றுவது என்பன தொடர்பாக இந்தக் குழு முடிவெடுக்கும்.
இந்த நிலையில், அவைக்குழு புதன்கிழமை காலை கூடியது. தமிழக சட்டப் பேரவைக்குள் செல்போன் கொண்டு வர தடை விதிப்பது என முடிவு செய்யப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் அவசரமாக யாருடனாவது பேச வேண்டும் என்று நினைத்தால், லாபியில் 10-க்கும் மேற்பட்ட பொதுத் தொலைபேசிகளை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப் பேரவையில் ஏறக்குறைய சரிபாதி உறுப்பினர்கள் புதியவர்களாக உள்ளனர். அவர்கள் பேரவைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களையும் கூட எடுத்து வருகின்றனர். பேரவை நடைபெறும் நேரங்களில் அவை ஒலிப்பதும் உண்டு. இது குறித்து, பேரவைத் தலைவர் டி.ஜெயகுமார் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவும் அறிவுறுத்தியுள்ளார்.
அவையின் மூத்த உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தங்களது உதவியாளர்கள் அல்லது வாகன ஓட்டுநர்களிடம் செல்போன்களை கொடுத்து விட்டுத்தான் பேரவைக்குள் வருகிறார்கள். ஆனால், புதிய உறுப்பினர்கள் மட்டுமே அவற்றை உள்ளே எடுத்துச் செல்கின்றனர். பேரவை நடவடிக்கைகளை செல்போனில் படம் எடுத்ததாக திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, பேரவை நடவடிக்கைகளில் 10 நாள்கள் கலந்து கொள்ள முடியாதபடி ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.
இதுபோன்ற நிகழ்வுகளும், கர்நாடகப் பேரவையில் நடந்த சம்பவங்கள் போன்றும் நடைபெறாமல் தடுப்பதற்குப் பேரவைக்குள் செல்போனுக்குத் தடை விதிக்க அவைக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பை பேரவைத் தலைவர் டி.ஜெயகுமார் வெளியிடுவார் எனவும், அந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வரும் எனவும் தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்