1. மூடப்பழக்கவழக்கங்களில் சிக்குண்ட மூதாதையர்களின் மெளட்டீகங்களை அடையாளபப்டுத்தும் பகுத்தறிவு கண்ணை திறந்தது தான் திரைத்துறை என்பதை காலத்தின் ஓட்டத்தில் நாம மறந்து விடக்கூடாது.
2. வரலாற்று நாயகர்களை நேரில் பார்க்காத மக்களுக்கு அவர்களை நமது மனக்கன் முன் கொண்டு வந்து நிறுத்தியது திரைத்துறை தான்.
3. கலாச்சார சீரழிவுகள் கட்டுண்டு மனம் போன போக்கில் வாழும் மானுடரை மாற்றி அமைத்து மனிதனாய் வாழ வழி சொல்லியது தான் திரைத்துறை.
இப்படி பல்வேறு மாற்றத்திற்கு சொந்தம் கொண்டாடும் திரையுலகம் இன்று ஒரு சமூகத்திற்கு எதிராக திட்டமிட்டு பொய்யான கருத்துக்களை சாதாரண மக்களிடம் எடுத்துச்சொல்லி அந்த சமூகத்திற்கெதிரான மனநிலையினை உருவாக்கும் வேலையை கடந்த பல ஆண்டுகளாக செய்து வருகின்றது. ஆம்! முஸ்லிம் சமூகத்திற்கெதிரான பொய் பிரச்சாரத்தை இந்திய திரையுலகம் குறிப்பாக சொல்ல வேண்டும் நமது தமிழ் திரையுலகம் செய்து வருகிறது.
பல நாடுகளின் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பாரபட்சமில்லாமல் திரைத்துறையின் மூலம் முஸ்லிம் விரோத போக்கை செய்வதை பார்க்க முடிகிறது. சினிமாக்களில் வரக்கூடிய ஒவ்வொரு வசனங்களும் ஒவ்வொரு வார்த்தைகளும் சாதாரண மக்களை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மாற்றும் மனநிலையை உருவாக்ககூடியதாக அமைகிறது.
"உண்மை வீட்டு வாசலை விட்டு இறங்கும் முன் பொய் ஊரை சுற்றி வந்துவிடும்"
இது தமிழ்ப்பழமொழிகளில் ஒன்று. இதன் அடிப்படையிலேயே இன்று முஸ்லிம் சமூகத்திற்கெதிரான பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டு வருகிறது. இது போன்ற பொய் பிரச்சாரத்தால் முஸ்லிம் சமூகத்திற்கும், பிற சமூகத்திற்கும் இடையே மிகப்பெரிய பிளவை உண்டாக்கக்கூடிய சதிச்செயலை திரையுலகம் செய்து வருகிறது கண்டிக்கத்தக்கது. இதற்கு உதாரணமாக சமீப காலங்களில் வெளிவந்த திரைப்படங்களில் சில...
ரோஜா, பம்பாய், ஒற்றன், அரண், பயணம், வானம், உன்னைப்போல் ஒருவன்.... என பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது.
இதுபோன்ற நிலையில் இருந்து திரையுலகம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மட்டுமல்ல எந்த சமூகத்திற்கு எதிராகவும் விஷம பிரச்சாரத்தை திரையுலகம் இனிவரும் காலங்களில் தொடர கூடாது என்ற எதிர்பார்ப்புகளை உங்கள் முன்பு கோரிக்கையாக வைக்கின்றோம்.