தம்புள்ளை: இலங்கை தம்புள்ளையில் 50 ஆண்டுகால பழமை வாய்ந்த மஸ்ஜித் மீது புத்த சாமியார்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குண்டுவீசப்பட்டதில் பள்ளிவாசல் சேதமடைந்துள்ளது. நேற்று(வெள்ளிக்கிழமை) ஜும்ஆ தொழுகையை நிறைவேற்ற முஸ்லிம்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
புத்தர்களின் புனித ரங்கிரி விகார் அமைந்துள்ள தம்புள்ளையை புனித பூமி என்று புத்த சாமியார்கள் கொக்கரிக்கின்றனர். இங்கு அந்நிய மத வழிப்பாட்டுத் தலங்கள் இருக்கக்கூடாது என்று அச்சுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்தான் வியாழக்கிழமை இரவு பள்ளிவாசலில் குண்டுவீசப்பட்டது. ஆனால் எவருக்கும் அபாயம் இல்லை. மேலும் நேற்று 2000 புத்தச் சாமியார்களும், புத்தர்களும் கலந்துகொண்ட பேரணி தம்புள்ளை நகரில் நடத்தப்பட்டது.
தற்பொழுது ரங்கிரி புத்த அமைப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் மஸ்ஜித் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தம்புள்ளை ஜும்ஆ பள்ளிவாசல் வருகிற 23 ஆம் தேதி வரை போலீஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுவரை முஸ்லிம்கள் யாரும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட தடை விதித்து மஸ்ஜிதுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 23-ம் தேதி இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அவ்வேளையில் அதிகாரப்பூர்வ முடிவு எதுவும் எடுக்கப்படாவிட்டால், தாங்களே முன்னின்று பள்ளிவாசலை இடிக்கப் போவதாக புத்த சாமியார்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
தம்புள்ளை முஸ்லிம் மஸ்ஜிதின் அறங்காவலாளரான ரஹ்மத்துல்லாஹ் கூறுகையில், “புத்தர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்பகுதியில் இம்மஸ்ஜித் கடந்த 50 ஆண்டுகளாக நிலைப்பெற்றுள்ளது.” என்றார்.
இப்பகுதியில் உள்ள இந்துக் கோயிலையும் புத்த மத வெறியர்கள் தாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அனுராதாபுரத்தில் உள்ள தர்கா ஒன்று சிங்கள கயவர்களால் உடைக்கப்பட்டது.