சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினம் மீண்டும் வரும்போது ஒரு ‘சித்திரவதை கட்டமைப்பு’ என்ற நிலையில் ஆட்சி பீடங்களைக் குறித்த விவாதங்கள் தீவிரமடைகின்றன.திட்டமிட்ட ஆட்சியாளர்களின் மொழியின் அடித்தளத்தில் தான் உலகமெங்கும் அரசு ரீதியான சித்திரவதைகள் அரங்கேறுகின்றன.பொதுவாக ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியை கற்பனையில் உருவாக்குவார்கள்.அதற்கு எதிரான கொள்கைகளை உருவாக்குவார்கள்.கற்பனை எதிரிக்கு ஒரு சித்தாந்தத்தை உருவாக்கி வரலாற்றை வளைப்பார்கள்.அந்த மர்ம உலகில் மனிதர்களையும், மதங்களையும், சித்தாந்தங்களையும் சாத்தானிய சக்தியாக சித்தரிப்பார்கள்.அறிவுக்கு முற்றிலும் பொருந்தாத அந்த உலகில் அசாத்தியங்கள் எல்லாம் சாத்தியமாகும்.சித்திரவதைகளுக்கு கிடைக்கும் சமூக மனசாட்சியின் ஆதரவு, அந்த சித்திரவதைக் கட்டமைப்பைக் குறித்து கேள்வி கேட்க முடியாமல் தாங்கி நிற்கிறது.நமது தேசமும் அதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது அல்ல.சமகால சம்பவங்களின் பின்னணியில் சித்திரவதைகள் அதன் சித்தாந்த அடித்தளங்கள் குறித்து பேசுகிறார் பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான மீனா கந்தசாமி.
பாராளுமன்ற தாக்குதல், அப்ஸல் குருவின் மரணத்தண்டனை, அது தொடர்பான விவாதங்கள், டெல்லி பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களின் அரசியல் சிந்தனைகள் குறித்து அவர் அலசுகிறார். காந்தியின் பிம்பத்தை விமர்சித்து கவிதை எழுதினார் என்ற பெயரில் தேசவிரோதியாக சித்தரிக்கப்பட்ட மீனா கந்தசாமிக்கு அவரது சொந்த வாழ்க்கையிலும் இது போன்ற அனுபவங்கள் உண்டு.
அப்ஸல் குருவின் கொலை!
தொடர்ச்சியாக மரணத்தண்டனைகளை நிறைவேற்றுதல், குடிமக்களோடு போர் பிரகடனம் செய்தல் போன்ற நிலைபாடுகளில் ஆட்சி பீடங்களின் மன நிலையை புரிந்துகொள்ள முடியும் என்று மீனா கருதுகிறார்.அதற்கு சிறந்த உதாரணம் அப்ஸல் குரு வழக்கு.’இவ்வழக்கில் ஏராளமான பழுதுகள் உள்ளன.தான் நிரபராதி என்பதை நிரூபிக்க அவருக்கு வழக்கறிஞர் கிடைக்கவில்லை.அதுமட்டுமல்ல அவரது கோரிக்கையை கேட்க இந்நாட்டின் நீதிபீடங்களும் தயாராக இருக்கவில்லை.துவக்கம் முதலே அவருக்கு மரணத் தண்டனையை நிறைவேற்றும் முயற்சிகள் தாம் நடந்துவந்தன.அவ்வகையில் கிலானி அதிர்ஷ்டசாலி.பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் கிலானி குற்றவாளியாக சேர்க்கப்பட்டாலும், அவருக்கு தான் நிரபராதி என்பதை நிரூபிக்கவும், விடுதலையாகவும் முடிந்தது’.
ஹிந்து வாக்குகளை கவருவதற்காக அப்ஸல் குரு தூக்கிலிடப்பட்டார் என்ற கருத்தை மீனா ஏற்றுக்கொள்ளவில்லை.ஹிந்து தீவிரவாத குழுக்களின் வாக்குகள் கிடைக்கும் என்றாலும் அதைவிட அபாயகரமான ஆழமான சில ஆதாயங்களின் அடிப்படையில் தான் அரசு அப்ஸல் குருவை தூக்கிலிட்டது என்பது மீனாவின் கருத்தாகும்.’அரசு என்ற சித்திரவதை இயந்திரத்தின் பிரியமான எரிபொருளாக அமைந்தது அப்ஸல் குருவுக்கு கிடைத்த தூக்குத்தண்டனை.இந்தியாவை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது நாங்கள் தாம் என்பதை பொதுமக்களுக்கு புரியவைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அப்ஸல் குருவின் தண்டனை நிறைவேற்றம் அமைந்தது.
பாராளுமன்றம் தாக்கப்பட்டால் நாட்டில் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏராளம் உள்ளதாக பொது சமூகத்திற்கு உணர்த்த முடியும்.பொது சமூகம் ஏற்றுக்கொள்ளும் ஒரு எதிரியை கண்டுபிடிப்பது அடுத்த பிரச்சனை. அதற்கு கஷ்மீர் முஸ்லிமை விட தகுதியுடையவர் யார் இருக்கிறார்?அவர் தாம் அப்ஸல் குரு. முஸ்லிம்களும், கஷ்மீரிகளும் நாட்டிற்கு எதிரானவர்கள் என்ற தொடர்பிரச்சாரம்தான் நடந்துவருகிறதே!இந்த எதிரிகளிடமிருந்து இந்தியாவை காப்பாற்றத்தான் அப்ஸல் குருவை தூக்கிலிட்டுள்ளனர்.ஆனால், இத்தகைய கொடுமைகள் முஸ்லிம்களுக்கோ, கஷ்மீரிகளுக்கோ எதிரானது அல்ல என்று பரப்புரைச் செய்ததுதான் அரசுக்கு கிடைத்த வெற்றி’ என்று மீனா கந்தசாமி கூறுகிறார்.
தேசியவாதமும், போலியான கற்பனைகளும்!
பாராளுமன்ற தாக்குதல் தொடர்பாக நடந்த விவாதங்களில் பாராளுமன்றத்தை ஒரு கோயிலுக்கு ஒப்பாக பலரும் கற்பனைச் செய்து வழங்கியிருந்தனர்.அதில் அடங்கியிருக்கும் அபாயங்களை மீனா நினைவு கூறுகிறார்.’இந்திய ஜனநாயகத்தைக் குறித்து ஊனமான கற்பனைகள் பரப்புரைச் செய்யப்பட இவை காரணமாயின.பாராளுமன்றம் தாக்கப்பட்டபோது ஒரு கோயில் தாக்கப்பட்டதாக பலரும் கள்ளம் கபடம் இல்லாது நம்பினர்.இது பாராளுமன்றத்தின் உண்மையான நிலையை எல்லாவேளைகளிலும் மூடி மறைக்க உதவியது.பாராளுமன்றத்திற்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து பொதுமக்கள் அறியாமல் உள்ளனர்.அங்கே நடக்கும் ஊழலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளும் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கின்றன. நிலைமை இவ்வாறிருக்கு அரசு, உண்மைக்கு புறம்பாக வேறொன்றை மக்களை நம்பவைக்க முயற்சிக்கிறது.ஆனால், இது சீரழிந்த கட்டமைப்பு என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். இதில் இருந்து தப்பிக்கவே பாராளுமன்ற தாக்குதல் போன்ற கதைகள் உருவாக்கப்படுகின்றன.
மரணத் தண்டனையும், சமூக மனசாட்சியும்!
ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனை வழங்கும் நாகரீகமற்ற தேசமாக நாம் மாறிவிட்டோம் என்று மீனா கந்தசாமி ஆதங்கப்படுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.மரணத் தண்டனையை நிறைவேற்றுவதில் ஏராளமான பிரச்சனைகளை அவர் சுட்டிக்காட்டுகிறார்.’மரணத்தண்டனை ஒரு வகையில் இரட்டை தண்டனையாகும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரரிவாளனும், இதர இருவரும் 22 வருடங்களாக கொடுமைக்கு ஆளாகின்றனர்’.அப்ஸல் குருவிற்கு மரணத் தண்டனை விதிக்கும்போது உச்சநீதிமன்றம் வெளியிட்ட ‘சமூக மனசாட்சி’ என்ற கருத்தைக் குறித்தும் மீனா கேள்வி எழுப்புகிறார்.’குடிமக்கள் நீதியை எதிர்பார்க்கும் ஒரு இடத்தில் இருந்து கேட்கக்கூடாதவையே இத்தகைய கருத்துக்கள்.’சமூக மனசாட்சி’ என்பது உண்மையானது அல்ல.
’நமது தேசம் ஒன்று!நாம் பாரத மக்கள்’ என்பது போலவே ’சமூக மனசாட்சி’ என்ற கருத்தையும் நிர்மாணிக்கின்றனர். குற்றவாளிகளாக சேர்க்கப்படுபவர்களில் பெரும்பாலோர் கஷ்மீரிகளும், முஸ்லிம்களுமாக இருப்பது குறித்தும் மீனா கேள்வி எழுப்புகிறார்.’இது எதேச்சையனது அல்ல.கஷ்மீருக்கு சொந்தமாக ஒரு அரசியல் உண்டு.அதனை ஒப்புக்கொள்ள தேசம் தயாராகவில்லை என்பதே பிரச்சனை’.
’தற்போது கஷ்மீரில் சோதனைச் செய்யப்படும் அரசியல் நாளை வடகிழக்கு மாநிலங்கள், மணிப்பூர் ஏன் தமிழ்நாட்டிலும் பரவலாக்கப்படலாம்’ என்று மீனா அச்சம் தெரிவிக்கிறார்.
தேசியவாத கற்பனையுடன் தொடர்புடையதாகவே இப்பிரச்சனைகளை மீனா மதிப்பீடுச் செய்கிறார்.ஆட்சி பீடங்களைக் குறித்த லெனினிஸ்ட் கொள்கைகளை குறித்தும் மீனா கூறுகிறார்.’ஆட்சிபீடத்தைக் குறித்து லெனின் கூறியது முக்கியமானது.தேசியவாதத்தின் இருப்பை உறுதிப்படுத்துவது அல்ல.மாறாக துணை தேசியவாதங்கள் உருவாகி பிரிந்து செல்லும் சுதந்திரம் ஏற்பட்டுவிடுமோ என்பதுதான் பிரச்சனை.சாரு மஜூம்தான் இந்தியாவைக் குறித்து கூறியதும் இதுதான்.’தேசிய வாதம் குறித்த நமது சிந்தனைகளை புதுப்பிக்கவேண்டும் என்று மீனா கருதுகிறார்.
மரணத் தண்டனையின் அரசியல்!
டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தை தொடர்ந்து சமூக ஆர்வலர்களும், கலாச்சார ஆர்வலருகளும் எழுப்பிய ‘மரணத்தண்டனை’ முழக்கத்தை மீனா கந்தசாமி சந்தேகத்தோடு நோக்குகிறார்.’பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களின் பெயரால் மரணத் தண்டனையை நிறைவேற்றவேண்டும் என்று வாதிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.பாலியல் பலாத்காரம் ஒரு தனிநபரின் புறத்தில் இருந்து உருவாகும் தீமையாகும்.மனதுடன் தொடர்புடைய பிரச்சனைகள் தாம் அதற்கு தூண்டுகோலாக அமைவதாக பல பாலியல் பலாத்கார வழக்குகளும் நிரூபிக்கின்றன. நமது ஊடகங்களும், நுகர்வு கலாச்சாரமும் உள்ளிட்டவை இதன் பின்னணியில் உள்ளன. மரணத் தண்டனை ஒரு போதும் அதற்கு தீர்வு ஆகாது’.
மரணத் தண்டனை குடிமக்களின் உரிமைகள் மீதான மிகப்பெரிய அத்துமீறலாகும்.அது பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்களை குறிவைக்கிறது.பல நாடுகளின் வரலாறும் இதனை நிரூபிக்கிறது.இந்தியாவில் மரணத்தண்டனை தலித்துகளையும், சிறுபான்மை மக்களையும் குறிவைக்கும்போது அமெரிக்காவில் கறுப்பு இன மக்கள் குறிவைக்கப்படுகின்றனர்.மரணத்தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் தான் ப்ளேக் பேந்தர்ஸ் போன்ற அமைப்புகள் அமெரிக்காவில் வலுப்பெற்றன.அரசியல் எதிரிகளை மரணத்தண்டனைக்கு ஆளாக்குவதில் மிகப்பெரிய வரலாறு அமெரிக்காவிற்கு உள்ளது.இவ்விவகாரத்தில் இந்தியா அமெரிக்காவை பின்பற்றுகிறது.
டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு எதிரான போராட்டத்தில் எழுந்த மரணத் தண்டனைக் குறித்த முழக்கம், உணர்ச்சிகொந்தளிப்பின் விளைவாக எழுந்தது என்று மீனா கருதுகிறார்.’நாட்டில் மத்திய தரவர்க்கம் எழுப்பிய முழக்கமே அது.ஊடகங்கள் அளவுக்கதிகமான முக்கியத்துவத்தை அதற்கு வழங்கின.இந்தியாவில் ராணுவம் நடத்தும் கொடுமைகளுக்கு எதிராகவோ, தலித், முஸ்லிம்கள் பாதிக்கப்படும் வழக்குகளிலோ, குஜராத் இனப்படுகொலைகளின் போது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளிலோ எழாத எதிர்ப்பு டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில் எழுந்தது.
கொண்டாட்டமாக நடந்த அந்த போராட்டங்கள் ஒரு ஸ்டைலிஷ் ப்ரொடஸ்ட் மட்டுமே’ என்று கூறும் மீனா, அப்போராட்டங்களை அவர் புறக்கணிக்கவில்லை.’சமூக இணையதளங்கள் மூலம் மக்களையும், உலகையும் புரிந்துகொண்ட ஒரு சமூகத்தின் எதிர்ப்புகளை சமூக மாற்றத்தின் ஒரு பகுதியாக காணவேண்டும்.ஒரு விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்க மத்திய தர வர்க்கம் முன்வந்ததே பெரிய விஷயம்.இந்த மத்திய வர்க்க சக்தியை எவ்வாறு பாஸிட்டீவாக உபயோகிக்கவேண்டும் என்பதுக் குறித்தே நாம் சிந்திக்கவேண்டும்’என்கிறார்.
ஊடகங்களும் இந்திய சமூகமும்!
தேசம் இத்தகையதொரு சூழலில் கடந்து செல்லும்போது பாதுகாவலர்களாக மாறவேண்டிய ஊடகங்கள் எதிர்புறம் கூட்டு சேர்வதுக் குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார் மீனா.’மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி என்ற மாவட்டத்தில் 2 மாதங்களில் 150 குழந்தைகள் இறந்துள்ளன.பட்டினியும், தொற்றுநோய்களுமே இம்மரணங்களுக்கு காரணம்.
தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.காரணம், சாதிகளுக்கு இடையேயான பிரச்சனை.வறுமை, விவசாயிகளின் பிரச்சனைகள், தொற்று நோய்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் உள்ளிட்டவை மூலம் மிகப்பெரிய மரண சதவீதத்தைக் கொண்டது நமது நாடு.இதனை எதிர்த்து போராடும் சமூகம் இங்கு எக்காலத்திலும் உண்டு.அவர்களுக்கு ஆதரவாக முன்னணியில் நிற்கவேண்டியது ஊடகங்களாகும்.துரதிர்ஷ்டவசத்தால் அவர்கள் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி, யார் நன்றாக பாடுகிறார்?, யார் நன்றாக நடிக்கிறார்? ஆகியவற்றை ஆராய்ந்துகொண்டும், நட்சத்திரங்களை கண்டுபிடித்துக்கொண்டும் இருக்கின்றார்கள்.
மத்திய தரவர்க்கத்தின் வாழ்க்கைப்பாணிகளை பின்பற்ற பொது சமூகத்திற்கு போதிக்கின்றன ஊடகங்கள். அதேவேளையில் சமூக இணையதளங்கள் வழியாக இதனை எதிர்ப்பவர்களை ஆட்சேபிக்க மீனா தயாரில்லை.’பொது சமூகத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு டெக்னாலஜிதான் சமூக இணையதளங்கள்.இதற்கு எதிரான அணுகுமுறையும், பிரச்சாரமும் நடத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.இந்திய அரசு ஐ.டி ஆக்டில் திருத்தங்கள் கொண்டுவரத்துவங்கியதின் தவறான நோக்கம் வரும் காலங்களில் புரியவரும்’ என்று கூறும் மீனா, சமூக இணையதளங்களின் நன்மைகளுடன் அதனால் ஏற்படும் தீமைகளையும் கண்டும் காணாமல் இருக்கக் கூடாது என்கிறார்.
சித்திரவதைகளுக்கு எதிரான பொது சமூகத்தின் மனசாட்சியை உருவாக்குவதில் சமகால சம்பவங்கள், அதுக் குறித்த ஊடக விவாதங்கள் உருவாக்கும் ஆதரவான சூழலைக்குறித்து மீனா அதிகமாக விவாதித்தார். புதிய-சம்பிரதாய ஊடகங்களில் நடக்கும் விவாதங்களில் ஆக்கப்பூர்வமாக கலந்துகொண்டு சித்திரவதைக்கு ஆதரவான மனோநிலையை அழித்தொழிக்க நம்மால் இயலும் என்று மீனா நம்புகிறார்.
நன்றி:தேஜஸ்
தமிழில்:அ.செய்யதுஅலீ