சவாய் மதோபூர் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக அடுத்த மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகள் "சமூக நீதி மாநாடு" டெல்லியில் பிரசித்திப்பெற்ற இடமான ராம்லீலா மைதானத்தில் வைத்து நடக்க இருக்கிறது. இதன் பிரச்சாரங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலத்திலும் மாநாட்டிற்கான பிரச்சாரம் நேற்று முதல் தொடங்கியது. வரலாற்று சிறப்புமிக்க நகரமான சவாய் மதோபூரில் நேற்று சுமார் ஐயாயிரம் பேர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்துடன் மாநாட்டிற்கான பிரச்சாரம் அம்மாநிலத்தில் தொடங்கியது.
இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் உரையாற்றும்பொழுது ஒடுக்கப்பட்ட, நீதி மறுக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் நீதியை போராடி பெறுவதற்கான போராட்ட பாதையில் ஒரு மைல்கல்லாக இந்த சமூக நீதி மாநாடு அமையும் என்றார். மாநாட்டை நடத்துவதற்கான கருவைப்பற்றி விளக்கிய பேசிய தேசிய செயற்குழு உறுப்பினர் அனீஸ் அஹமது அவர்கள் கூறும்போது சமூக நீதி என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமை என்றாலும் அது முஸ்லிம் சமூகத்திற்கும், பிற்படுத்த சமூகத்திற்கும் ஒரு கனவாகவே இருந்துவருகிறது. முஸ்லிம்களும், தலித்களும் மற்றும் இன்ன பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களும் இதனால் வரை நீதிக்காக யாசகம் கேட்டுவந்த நிலையை மாற்றி போராட்ட நிலையை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் உஸ்மான் பேக் ரஷாதி அவர்கள் உரையாற்றும்போது "முஸ்லிம் சமூகத்தை எல்லா அரசியல்வாதிகளும் ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்குள் எத்துனை வேறுபாடுகள் இருந்தாலும் முஸ்லிம் சமூகத்திற்கு துரோகம் இழைப்பதில் மட்டும் அவர்களுக்கு மத்தியில் எந்த வேறுபாடும் இருப்பதில்லை. அத்வானி மேற்கொண்டு வரும் ரதயாத்திரை மீண்டும் சங்கப்பரிவாரங்கள் ஆட்சி அதிகாரத்திற்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணத்திலேயே நடத்தப்படுகிறது!" எனக்கூறினார்.
ராஜஸ்தான் மாநில எஸ்.டி.பி.ஐயின் பொதுச்செயலாளர் ஹஃபீஸ் மன்சூர் அலிகான், தலித் இயக்கத்தின் தலைவர் டாக்டர் இந்திராராஜ் சிங் மேகவால், ராஜஸ்தான் முஸ்லிம் ஃபாரத்தின் மாநில தலைவர் காரி மொய்னுதீன், நிஜாருல்லாஹ் சாஹிப், மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் ராஜஸ்தான் மாநில துணைத்தலைவர் அஸ்லம் கான் ஆகியோர் பங்கெடுத்து சிறப்புரையாற்றினார்கள்.
சவாய் மாதவ்பூர் மாவட்ட தலைவர் ஆபித் கான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர்.