வாஷிங்டன் : அமெரிக்காவில் பொருளாதார சமமின்மைக்கு எதிராக வெடித்துக் கிளம்பிய வால்ஸ்ட்ரீட் போராட்ட மாதிரியில் பல்வேறு நாடுகளிலும் போராட்டம் துவங்கியுள்ளது.
பெரும் குத்தகை நிறுவனங்கள், வங்கிகளின் விருப்பத்திற்கு உடந்தையாக இருக்கும் அமெரிக்க அரசு மற்றும் அரசியல்வாதிகளின் தவறான கொள்கைகளுக்கு எதிராக நியூயார்க்கில் வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் துவங்கியது. இந்த போராட்டத்திற்கு ஆதரவை தெரிவித்து நேற்று உலகமுழுவதும் சம அளவிலான போராட்டங்கள் துவங்கின.
ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய துணைக்கண்டங்களில் 82 நாடுகளில் 951 நகரங்களில் மக்கள் பொருளாதார மையங்களின் முன்னால் போராட்டம் நடத்தினர்.
சாதாரண நபரின் விருப்பத்தை கவனத்தில் கொள்ளும் உலக ஒழுங்குமுறைக்காகத்தான் இப்போராட்டம் என போராட்டத்தின் அமைப்பாளர்கள் இணையதளம் மூலமாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் மட்டுமல்ல உலகமுழுவதும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தாம் எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருப்பதால் உலக அளவிலான போராட்டம் நடத்துவதாக யுனைட்டட் ஃபார் க்ளோபல் சேஞ்ச் என்ற இணையதளத்தில் போராட்ட அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்னிலும், சிட்னியிலும் நடந்த போராட்டத்தில் இரண்டாயிரம் பேர் பங்கேற்றனர். நியூசிலாந்து, தென்கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஹாங்காங், தைவான் ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடந்ததாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது.
ஐரோப்பாவில் இத்தாலியின் ரோம், ஸ்பெயினின் மாட்ரிட், க்ரீஸின் ஏதென்ஸ், பிரான்சின் பாரிஸ், ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட் ஆகிய நகரங்களிலும் மக்கள் போராட்டத்திற்கு தயாராகி வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எல்லா இடங்களிலும் அமைதியாக போராட்டங்கள் நடந்தேறின. அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் நேற்று பிரம்மாண்ட பேரணிகள் நடைபெற்றன. பல இடங்களிலும் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
நியூயார்க்கில் ஜுக்கோட்டி பூங்காவிலிருந்து எதிர்ப்பாளர்களை அகற்ற போலீஸார் எடுத்த நடவடிக்கையில் மக்களின் கோபம் கிளம்பியதால் கடைசி நிமிடத்தில் அது ரத்துச் செய்யப்பட்டது. லண்டனில் நடந்த போராட்டத்தில் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்ச் பங்கேற்றார்.