புதுடெல்லி:அரசு பயங்கரவாதம் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை மெளனிகளாக மாற்ற நினைக்கும் போலீஸ் அடக்குமுறையை கண்டித்தும் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா தேசிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டத்தை நடத்தவிருக்கிறது.
சென்னையில் நடைபெற்ற தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் இதுத்தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக எஸ்.டி.பி.ஐயின் பொதுச்செயலாளர் எ.ஸயீத் தெரிவித்துள்ளார்.
மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை கைது செய்தது மற்றும் பி.யு.சி.எல் பொதுச்செயலாளர் கவிதா ஸ்ரீவஸ்தவாவின் ஜெய்ப்பூர் வீட்டில் நடத்திய உயர் போலீஸ் அதிகாரிகளின் ரெய்ட் ஆகியவற்றைக் கண்டித்து இந்த தர்ணா போராட்டம் நடத்தப்படுகிறது.
ராஜஸ்தானில் எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் ஜெய்ப்பூரில் கவிதா ஸ்ரீவஸ்தவாவின் வீட்டிற்கு முன்பு அட்டைகளை ஏந்தி தர்ணா நடத்தி அவருக்கு தங்களது கூட்டு ஒருமைப்பாட்டை பிரகடனப்படுத்துவார்கள்.
2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையிலும், ஹரன் பாண்டியா கொலை வழக்கிலும் மோடியின் பங்கினை வெளிப்படுத்தியதுதான் சஞ்சீவ் பட்டின் கைதிற்கு காரணமாகும்.
சட்டீஷ்கர் அரசின் மனித உரிமைகளை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளையும், ராஜஸ்தான் அரசு கோபால்கரில் முஸ்லிம்களுக்கு எதிராக போலீசார் மூலம் நடத்திய மனிதத்தன்மையற்ற கொடுமைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததுதான் கவிதா ஸ்ரீவஸ்தவாவின் வீட்டை ரெய்டு நடத்த காரணம் என எஸ்.டி.பி.ஐ நிர்வாக குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.