புதுடெல்லி : மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா தீர்மானித்துள்ளது.
சென்னையில் நடந்த தேசிய நிர்வாகக்குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறவிருக்கும் மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது.
ஆட்சியாளர்களிடமும், போலீசாரிடமும் காணப்படும் ஜாதீய, மதரீதியான அளவுகோல்கள்தாம் ராஜஸ்தானில் கோபால்கரிலும், தமிழ்நாட்டில் ராமநாதபுரத்திலும் போலீஸ் துப்பாக்கிச் சூடுகளுக்கு காரணமானது என எஸ்.டி.பி.ஐ நிர்வாக குழு குற்றஞ்சாட்டியுள்ளது.அரசு பயங்கரவாதத்திற்கும், தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை மெளனிகளாக்குவதற்கான போலீசாரின் கொடூர நடவடிக்கைகளுக்கும் எதிராக 20-ஆம் தேதி தேசிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா நடத்தப்படும் என பொதுச்செயலாளர் எ.ஸயீத் அறிவித்துள்ளார்.
குஜராத்தில் நரேந்திரமோடிக்கு எதிராக குரல் எழுப்பிய மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டதற்கும், பி.யு.சி.எல் பொதுச்செயலாளர் கவிதா ஸ்ரீவஸ்தவாவின் ஜெய்ப்பூரில் உள்ள வீட்டை போலீஸ் உயர்மட்டக்குழு ரெய்டு நடத்தியதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த தர்ணா போராட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு தேசிய தலைவர் இ.அபூபக்கர் தலைமை வகித்தார்.