புதுடெல்லி : பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி துவங்கியுள்ள ஊழலுக்கு எதிரான ரதயாத்திரை அரசியல் கேலிக்கூத்து என சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது; ‘அரசியலில் புகழ்மங்கிய தனக்கும், தனது கட்சிக்காகவும் புதிய அதிர்ஷட சோதனைக்கு தயாராகியிருக்கிறார் அத்வானி. ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா பாராளுமன்றத்தின் பரிசீலனையில் இருக்கவே அத்வானி நடத்தும் யாத்திரை கண்டிக்கத்தக்கதாகும்.
1996-ஆம் ஆண்டு ஹவாலா பண பரிமாற்ற பட்டியலில் முதல் இடத்தை அலங்கரித்தவர் அத்வானி. கர்நாடகாவில் பா.ஜ.க வின் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், முன்னாள் அமைச்சர்களான ரெட்டி சகோதரர்களும் ஊழலில் மூழ்கி சட்ட நடவடிக்கையை எதிர் நோக்கியிருக்கும் வேளையில் ஊழலுக்கு எதிராக முழக்கமிட பா.ஜ.கவுக்கு தார்மீக உரிமையில்லை.1990-ஆம் ஆண்டு அத்வானி நடத்திய ரதயாத்திரையின் காயங்கள் இதுவரை ஆறவில்லை. நாட்டை மீண்டும் வகுப்புவாதத்தில் ஆழ்த்தி ஆதாயம் தேட ஹிந்துத்துவா சக்திகள் முயல்கின்றன. குடிமக்களின் சொத்துக்களுக்கும், உயிர்களுக்கும், அவர்களுடைய கண்ணியத்திற்கும் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு தனியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.’ இவ்வாறு அபூபக்கர் தெரிவித்துள்ளார்.