ஹைதராபாத்:ஹைதராபாத் பழைய நகரத்தில் வகுப்புக்கலவரம் பரவ காரணம் வி.ஹெச்.பி ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பிரவீன் தொகாடியாவின் வெறியூட்டும் உரைதான் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொகாடியாவின் வெறியூட்டும் பேச்சுக்கு பிறகு வி.ஹெச்.பி தலைவர் கோவிந்த்சிங், குர்மாங்குடாவில் பா.ஜ.க கவுன்சிலர் ஸஹதேவ் யாதவ் ஆகியோரின் தலைமையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர் என்று ஹைதராபாத்தில் மனித உரிமை அமைப்பான பி.யு.சி.எல்லின் கண்காணிப்பு கமிட்டி போலீஸ் கமிஷனர் ஏ.கே.கானிடம் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளது.
கொந்தளிப்பை உருவாக்கும் உரைகளை நிகழ்த்தியதற்காக பல்வேறு வழக்குகள் தொகாடியாவின் மீது ஹைதராபாத்தில் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் அவருக்கு அனுமதி வழங்கி உரை நிகழ்த்த போலீஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
ஹனுமான் கோயிலுக்கு அருகே சந்தேகத்திற்கிடமான நிலையில் மாமிசம் கண்டெடுக்கப்பட்டதன் பெயரால் சங்க்பரிவாரம் திட்டமிட்டு தாக்குதலை நடத்தியுள்ளது. போலீஸில் உள்ள சங்க் அனுதாபிகள் இதற்கு ஒத்தாசை வழங்கியுள்ளனர்.
குர்மாங்குடா மற்றும் ஸஈதாபாத்தில் முஸ்லிம்கள் அதிகமாக தாக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் வீடுகளில் அத்துமீறி நுழைந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் முஸ்லிம் பெண்களை அவமானப்படுத்தியுள்ளனர். வன்முறையாளர்களை தடுக்க வேண்டிய போலீஸ் முஸ்லிம் இளைஞர்களை அதிகமாக கைது செய்துள்ளது.
ஹிந்துத்துவா வாதிகளின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து போலீஸ் செயல்படக்கூடாது. முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். இவ்வாறு சிவில் லிபர்டீஸ் மானிட்டரிங் கமிட்டி தலைவர் லத்தீஃப் முஹம்மது கான் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.