புதுடெல்லி:இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் மீதான அநியாய தடையை நீட்டிப்பதற்கு மஹராஷ்ட்ரா போலீஸ் தீர்ப்பாயம்(ட்ரிப்யூனல்) முன்பாக ஆதாரமாக சமர்ப்பித்தது 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல பாரசீக கவிஞர் மீர்ஸா காலிபின் கவிதை வரிகளாகும்.
சிமிக்கு இரத்தத்தை ஓட்டுவதற்கு அலாதி பிரியம் ஏற்பட தூண்டுகோலாக அமைந்த இலக்கியம் என்று கூறி மீர்ஸா காலிபின் கவிதையின் ஒருபகுதியை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே.ஸாலி தலைமையிலான தீர்ப்பாயம் முன்பு சமர்ப்பித்த பிரமாணப்பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக காலிபின் கவிதை வரிகளை மராத்தி மொழியில் தவறாகவும் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது.
இன்ஸ்பெக்டர் சிவாஜிராவ் தம்பாரே என்பவர் பிரமாணப்பத்திரத்தை(affidavit) தயாரித்துள்ளார். சிமி எவ்வளவு தூரம் அபாயகரமான(?) அமைப்பு என்பது இந்த கவிதை வரிகளின் மூலம் புரியவருவதாக பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் சிமியின் மீதான தடை தொடரவேண்டும். மஹராஷ்ட்ராவை இந்தியாவில் இருந்து பிரிப்பதற்கு சிமி முயற்சிக்கிறது என்று பிரமாணப்பத்திரம் குற்றம் சாட்டுகிறது. இதற்கு எவ்வித ஆதாரமும் காட்டப்படவில்லை. ஆனால், அங்கும் காலிபின் கவிதை வரிகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
மஹராஷ்ட்ரா போலீஸ் தவிர ஆந்திர மாநில போலீசும் விசித்திரமான காரணங்களை கூறி சிமியின் தடையை நீட்டிக்க கோரியுள்ளது. ஹைதராபாத் மாநிலம் ஸய்தாபாத் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பி.தேவேந்தர் அளித்த பிரமாணப்பத்திரத்தில் சிமி உறுப்பினர்கள் தற்பொழுதும் ரகசியமாக செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ உள்பட எட்டு அமைப்புகளின் பெயரில் அவர்கள் செயல்படுவதாக தேவேந்தர் குற்றம் சாட்டுகிறார்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ யை குறிப்பிடுகின்றீர்களா? என்று தீர்ப்பாயத்தின் கேள்விக்கு பதில் அளித்த தேவேந்தர். ‘ஆம் ஐ.எஸ்.ஐ சிமியின் முக்கிய அமைப்பு’ என்று விசித்திரமாக கூறினார்.
மும்பை காட்கோபர் போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் உதய்சிங் ராத்தோர் தயாரித்த பிரமாணப்பத்திரத்தில் மலேகானைச் சார்ந்த ஷபீர் அஹ்மத் மஸீஉல்லாஹ், மும்பையைச் சார்ந்த நஃபீஸ் அஹ்மத் அன்ஸாரி ஆகிய சிமி உறுப்பினர்களை கைது செய்ததாக கூறுகிறார். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய ஆயுதம் என்ன தெரியுமா? டெல்லி உருது அகாடமி வெளியிட்டுள்ள ‘உமாங்’ என்ற சிறுவர்களுக்கான மாத இதழாகும். இவ்வழக்கில் தீர்ப்பாயத்தின் விசாரணை இன்று துவங்குகிறது.
ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் தடையை நீட்டிப்பதற்கு இந்தியாவின் காவல்துறை எவ்வளவு முட்டாள்தனமாகவும், கேவலமாகவும் நடந்துகொள்கின்றார்கள் என்பதற்கு மேற்கண்ட செய்திகளே போதுமான ஆதாரமாகும்.