சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் உள்ள நீலாங்கரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சிறுவன் தமீம் அன்சாரியின் வாயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுட்டத்தில் தொண்டையில் குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த அந்தச் சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி மகாத்மா காந்தி நகரில் நேற்று முன்தினம் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டது. இது குறித்து நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வந்தார்.
இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 16 வயது சிறுவன் ஒருவனை அழைத்து வந்தனர். அவனிடம் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விசாரணை நடத்தினார்.’நான் திருடவில்லை’ என்று எவ்வளவோ கெஞ்சியுள்ளான் அந்த சிறுவன். ஆனாலும், அவனது பதிலில் திருப்தி இல்லாத போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மாலை 4 மணிக்கு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சிறுவனின் வாயில் வைத்து திருடினாயா? என மிரட்டியதாக தெரிகிறது.இதை கண்ட சிறுவன் மிரண்டுபோனான்.
அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் கையில் இருந்த துப்பாக்கியின் பட்டனில் விரல் பட்டு சிறுவனின் தொண்டையில் குண்டுபாய்ந்தது. உடனே சிறுவன் மயங்கி விழுந்தான். இதை கண்ட நீலாங்கரை போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.உடனே அவனை போலீசார் வேனில் ஏற்றிக்கொண்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு அவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
தகவல் அறிந்ததும் அடையாறு துணை கமிஷனர் கண்ணன்,பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர்கள் ஞானசேகரன், முகமது அஸ்லாம், சங்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.இதற்கிடையே நீலாங்கரை போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட இருப்பதாகவந்த தகவலை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தகவல் அறிந்தசிறுவனின் தாய் சபீனாபேகம், அண்ணன் ஜாகிர் ஹுசேன் ஆகியோர் கதறி அழுதனர்.
அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:–நேற்று முன்தினம் இரவு முதல் எங்கள் மகன் வீட்டிற்கு வரவில்லை. எங்குபோனான் என எங்களுக்கு தெரியாது. இந்த நிலையில் போலீசார் வந்து துப்பாக்கிகுண்டு பட்டு மருத்துவமனையில் இருப்பதாக கூறினார்கள். போலீசார் அவனை விசாரணைக்கு அழைத்து செல்லும் முன்பும் எங்களுக்கு தகவல் தரவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், போலீசார் சிறுவனை விசாரிக்கலாம் ஆனால், துப்பாக்கி வைத்து விசாரிக்கும் அளவுக்கு அவன் என்ன தீவிரவாதியா? சிறுவன் மீது துப்பாக்கிசூடு நடத்திய போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.விசாரணையில், சிறுவனின் தந்தை அனிபா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவனது தாய் சபீனாபேகம் அங்குள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். குண்டு பாய்ந்த சிறுவன் 6–ம் வகுப்பு வரை படித்துஇருக்கிறான்.
அங்கு எடுபிடி வேலை செய்து வந்தான். அங்குள்ள மற்றசிறுவர்களுடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டதாகதெரிகிறது.திருட்டு வழக்கில் கைதாகி சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கும்அவன் அனுப்பப்பட்டு உள்ளான். அதுபோல் அங்கிருந்த கோவில் உண்டியலில்திருடியிருக்கலாம் என போலீசார் அநியாயமாக சந்தேகப்பட்டு விசாரணைக்காகஅழைத்து வந்து உள்ளனர். விசாரணையின் போது தான் இந்த சம்பவம் நடந்துஉள்ளது.போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை காட்டி மிரட்டி விசாரித்த சம்பவம்அந்தப் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அறிந்தமாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உடனடியாக துறை ரீதியான விசாரணைக்குஉத்தரவிட்டார்.
மேலும் இந்த சம்பவம் பற்றி மாஜிஸ்திரேட்டு விசாரணைநடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மீதுஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.இதற்கிடையே இந்த சம்பவத்தை கண்டித்து வெட்டுவாங்கேணியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இரவு 50 பெண்கள் உள்பட 300 பேர் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று, இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.