பாபரி மஸ்ஜிதை மீட்க மதசார்பற்ற சக்திகள் ஒன்று திரளவேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
முஸ்லிம்களின் இறை இல்லமானா பாபரி மஸ்ஜித் சங்கபரிவார மதவெறியர்களால் தகர்க்கப்பட்டு இன்றோடு 19 வருடங்கள் நிறைவடைகின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கு இன்றும் நீதி கிடைக்கவில்லை. பாபரி மஸ்ஜித் இடிப்பை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி லிபர்ஹான் கமிஷன், ஏறத்தாழ 8 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிட்டு, 17 வருடங்கள் அதனை விசாரித்து சங்கபரிவார தலைவர்கள் உள்ளிட்ட 68 பேர் இதில் குற்றவாளிகள் என கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசிடம் அறிக்கை சமர்பித்தது. ஆனால் அந்த அஅறிக்கையின் படி எந்த வித நடவடிக்கையுமின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் ஒட்டுமொத்த உலகமும் பார்த்துக்கொண்டிருந்த போது நடைபெற்ற பாபரி மஸ்ஜித் இடிப்பை பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் ஒளிப்பரப்பு செய்தன. குற்றவாளிகள் யார் என தெளிவாக அதில் தெரிந்தது. லிபர்ஹான் கமிஷனும் குற்றவாளிகளை அடையாளம் காட்டியது. ஆனாலும் அந்த சங்கபரிவார குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு ஏன் தண்டிக்கபடவில்லை? என நடுநிலையாளர்கள் அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர்.
முஸ்லிம்களுக்கு சொந்தமான பாபரி மஸ்ஜிதை மூன்றாக பங்கு வைத்து இந்துக்களுக்கு 2 பங்கு, முஸ்லிம்களுக்கு 1 பங்கு என பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கில் கடந்த வருடம் செப்டம்பர் 30ம் நாள் அலஹாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பிற்கு பிறகும் முஸ்லிம் சமூகம் அமைதி காத்தது. இதற்கு காரணம் நீதியின் வாயில்கள் இன்றும் அடைபடவில்லை, உச்ச நீதிமன்றத்திலாவது நமக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பையும் நம்பிக்கையுமே அது காட்டுகிறது.
பாபரி மஸ்ஜித் ஆக்கிரமிப்பு மற்றும் இடிப்பு விவகாரத்தில் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு உச்ச நீதிமன்றம் அநீதி இழைத்த போதிலும் அலஹாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய சட்ட விரோத தீர்ப்பிற்கு தடைவிதித்தன் மூலம் பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்றது. அதே போன்று நீதி கிடைக்கும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நம்புகிறது.
நீதிக்கான போராட்டம் ஏன்?
அநீதி இழைக்கப்பட்ட சமூகம் - வஞ்சிக்கப்பட்ட சமூகம் நீதிக்காக தொடர்ந்து போராட வேண்டும், நீதியின் கதவுகள் திறக்கும் வரை அது போராட வேண்டும். நீதிக்காக ஒரு சமூகம் ஏங்கிக் கொண்டிருக்கின்றது என்ற குரல் ஆட்சியாளர்களின் கவனத்தை எட்ட வேண்டும். ஏனென்றால் அநீதி இழைக்கப்பட்ட தமது குடிமக்களுக்கு அதனை மீட்டுத்தரும் வகையில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது அரசின் கடமை.
ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்பொழுது தங்களுடைய சுயலாபத்தை மனதிற்கொண்டு பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க பாடுபடுவதாக போலி வாக்குறுதி அளிப்பதை விட்டுவிட்டு, உண்மையிலேயே முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்க மதசார்பற்ற அரசியல் கட்சிகள் முன் வரவேண்டும். இதனை வலியுறுத்தும் விதமாக நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராட வேண்டும்.
பாப்புலர் ஃப்ரண்டின் போராட்ட வியூகங்கள்:
தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் அவல நிலையை கண்டு, இளைஞர்கள் விரக்தியின் விளிம்பிற்கு சென்று தவறான பாதையை தேர்ந்தெடுத்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில், நீதியின்பால் நம்பிக்கை கொண்டு, சட்டரீதியாகவும், ஜனநாயக வழிமுறைகளிலும், போராடுவதற்கு கடந்த பல வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்களை பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் கடந்த பல வருடங்களாக டிசம்பர் 6 அன்று பல்வேறு கருத்தரங்கங்களை நடத்தி பாபரி மஸ்ஜித் மீட்பின் அவசியத்தை மக்களிடையே கொண்டு செல்கிறோம். பாபரி மஸ்ஜித் மீட்பு ஒரு வரலாற்று கடமை என்ற தலைப்பில் இந்த வருடம் சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஏர்வாடி, கும்பகோணம் ஆகிய இடங்களில் மாபெரும் கருத்தரங்குகளும், தமிழகம் முழுவது வீடு வீடாக துண்டுபிரசுரங்கள் வழியாக விழிப்புணர்வு பிரச்சாரமும் நடத்துகின்றோம்.
பாபரி மஸ்ஜித் மீண்டும் அதே இடத்தில் கட்டி தருவதாக காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரியும், நீதிபதி லிபர்ஹான் கமிஷன் பரிந்துரைத்த சங்கப்பரிவார குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரக்கோரியும், அந்த அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்தக்கோரியும், பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைந்து முஸ்லிமகளுக்கு நீதி வழங்கக்கோரியும் இந்த பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகின்றது.
மதசார்பற்ற சக்திகள் ஒன்று திரள வேண்டும்.
பாபரி மஸ்ஜித் மீட்பிற்கான போராட்டத்தில் முஸ்லிம் சமூகத்துடன் மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒரணியில் திரளவேண்டும். ஏனென்றால் பாபரி மஸ்ஜித் என்பது முஸ்லிம்களின் இறை இல்லம் என்பது மட்டுமல்ல, நமது தேசத்தின் 450 ஆண்டுகால வரலாற்று சின்னம். மேலும் இது நமது தேசத்தின் மிகப்பெரும் சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தேச விரோதிகளான சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகள் நடத்தி வரும் சதிச்செயலின் ஒரு பகுதியாகும். நாட்டின் இறையாண்மையையும், ஜனநாயகத்தையும், மதசார்பற்ற தன்மையையும் பாதுகாக்க மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டிய காலத்தின் கட்டாயமாகும் என பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள் விடுகின்றது.