புது டெல்லி : டி.என்.ஏ எனும் நாளிதழில் முஸ்லீம்களின் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கட்டுரை எழுதிய காரணத்துக்காக சுப்ரமணியன் சுவாமியின் பொருளாதாரம் குறித்த பாடங்களை நீக்குவதாக அவர் பணியாற்றும் உலக புகழ் பெற்ற பல்கலைகழகமான ஹார்வர்டு பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
டி.என்.ஏ எனும் நாளிதழில் தலையங்கம் எழுதிய சுவாமி, இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் தீவிரவாதிகள் ஆக்கப்படுவதாகவும் அதற்கு பதிலடியாக காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான 370 சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ் பட்டியலிடும் மசூதிகளை கோவில்களாக மாற்ற வேண்டும் என்றும் தங்கள் முன்னோர்கள் இந்துக்கள் என ஒப்புக் கொள்ளாதவர்களின் குடியுரிமையைப் பறிக்க வேண்டும் என்றும் இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுவதைத் தடுக்க சட்டம் வகுக்க வேண்டும் என்றும் முஸ்லீம்களுக்கு எதிராக விஷம் கக்கியிருந்தார்.
சுப்ரமணியன் சுவாமி ஹார்வர்டு பல்கலைகழகத்தில் 1965 ல் பொருளாதாரத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றவர் என்பதோடு அப்பல்கலைகழகத்தில் பகுதி நேர பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். அவருடடான உறவைப் பல்கலைகழகம் துண்டிக்க வேண்டும் என்று மாணவர்களில் ஒரு பிரிவினர் பல்கலைகழகத்திடம் மனு அளித்தனர்.
ஆரம்பத்தில் பேச்சுரிமை பாதுகாக்கும் பொருட்டு சுவாமியின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று பல்கலைகழகம் மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து, அப்பல்கலை கழக தத்துவவியல் துறையின் தலைவர் "சுவாமியின் பேச்சு என்பது பேச்சு சுதந்திரத்தைப் பற்றியதல்ல, மாறாக வெறுப்பூட்டும் பேச்சை அனுமதிப்பதா என்பதே ஆகும்" என்றார்.
அவரின் கோரிக்கையை ஏற்று அங்குள்ள பல்கலைகழக ஆசிரியர்களின் கூட்டத்தில் நடந்த ஒட்டெடுப்பில் ஹார்வர்டு பல்கலைகழகத்துக்கு என்று தார்மீக பொறுப்பு இருக்கிறது என்றும் இது போன்ற இனவெறியைத் தூண்டும் பேச்சை அனுமதிக்க முடியாது என்றும் சுவாமியின் பாடங்களை பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதாகவும் தெரிவித்தனர். ஆனால் சுப்ரமணியன் சுவாமி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.