புதுடெல்லி : 35 பேர்கள் கொல்லப்பட்ட 2006 முதல் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை(ஏ.டி.எஸ்) அதிகாரிகளிடம் விசாரணை நடத்துகிறது. இவ்வழக்கில் ஏ.டி.எஸ்ஸின் பங்கு மற்றும் அவர்கள் விசாரணையைக் குறித்து மீளாய்வு செய்வதற்கு என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணையின் ஒரு பகுதியாக மலேகானுக்கு சென்ற என்.ஐ.ஏ புலனாய்வு குழு முன்னர் இவ்வழக்கை விசாரித்த ஏ.டி.எஸ், சேகரித்த ஃபாரன்சிக் ஆதாரங்களை பரிசோதனைச் செய்தது. ஏ.டி.எஸ் அதிகாரிகளான துணை கமிஷனர் கெ.பி.ரகுவம்சி, துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுபோத் ஜெய்ஸ்வால் ஆகியோர் அடங்கிய ஏ.டி.எஸ் புலனாய்வு குழு இவ்வழக்கை முன்பு விசாரித்தது.
குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டதாக பொய் குற்றச்சாட்டை சுமத்தி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை ஏ.டி.எஸ் கைது செய்தது. பின்னர் இவர்கள் அண்மையில் விடுதலைச் செய்யப்பட்டனர்.
உள்ளூர் எஸ்.பி ராஜவர்தனாவையும் என்.ஐ.ஏ புலனாய்வு குழு விசாரணைச் செய்யும். விசாரணை நடைபெறும் வேளையில் ராஜவர்தன், தன்னை கட்டாயப்படுத்தி மர்ம நபர் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள வைத்தார் என இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் அப்ரார் குலாம் அஹ்மத் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார். ராஜவர்தன் 1997-ஆம் ஆண்டு பாட்சில் ஐ.பி.எஸ் அதிகாரியாவார்.
மலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டது சங்க்பரிவார் என மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதி சுவாமி அஸிமானந்தா வாக்குமூலம் அளித்து இருந்தார். மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுனில் ஜோஷிக்கும் இக்குண்டுவெடிப்பில் பங்குண்டு என அஸிமானந்தா தனது வாக்குமூலத்தில் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பல வருடங்கள் சிறையில் தங்கள் வாழ்க்கையை கழித்த அப்பாவி ஒன்பது முஸ்லிம்களின் ஜாமீன் மனுவிற்கு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
2006-ஆம் ஆண்டு ஷபே பராஅத் தினத்தில் மலேகான் ஜும்ஆ மஸ்ஜிதிற்கு அருகே மூன்று குண்டுகள் வெடித்தன. இதில் 35 பேர் கொல்லப்பட்டனர். உண்மையான குற்றவாளிகளைக் குறித்து விரிவான விசாரணை நடத்தாமல் குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடனேயே அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதில் ஏ.டி.எஸ் அவசரம் காட்டியது. விசாரணையை திசை திருப்ப ஆதாரங்களை ஏ.டி.எஸ் அழித்ததா? என்பதுக் குறித்தும் என்.ஐ.ஏ விசாரணை நடத்தும்.
2008-ஆம் ஆண்டு சங்க்பரிவார தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட 2-வது மலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங் தாக்கூர், கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் உள்ளிட்டவர்களை மஹராஷ்ட்ரா முன்னாள் ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே கைது செய்தார். இவ்வழக்கிலும் முஸ்லிம்களின் தலையில் குற்றத்தை கட்டி வைக்க ஏ.டி.எஸ் முதலில் முயன்றது. ஆனால், கர்காரே விசாரணைப் பொறுப்பை ஏற்றதும் குற்றவாளிகள் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் என்பது வெட்ட வெளிச்சமானது. இவ்வழக்கின் விசாரணை ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமையை நோக்கி சென்ற வேளையில் மும்பை தாக்குதலின் போது கர்காரே மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.