26/11 மும்பை தாக்குதல் வழக்கில் கைதான முஹம்மது அஜ்மல் கஸாபிற்கு சுதந்திரமான, நீதியான விசாரணை கிடைக்கவில்லை என உச்சநீதிமன்றத்தால் அஜ்மல்
கஸாபிற்காக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர்(அமிக்கஸ் க்யூரி) ராஜு ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் நீதிபதி அஃப்தாப் ஆலம் தலைமையிலான டிவிசன் பெஞ்ச் முன்பாக இதனை தெரிவித்தார். அவர் கூறியதாவது:இந்திய குற்றவியல் சட்டத்தின் 302-ம் பிரிவின் கீழ் கொலைக் குற்றச்சாட்டு கஸாப் மீது சுமத்தப்பட்டிருந்தாலும், இந்தியாவுக்கு எதிராக போர் நடத்த மேற்கொண்ட சதியில் அவர் பங்கேற்றதாகக் கூற முடியாது.
ஐயத்துக்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. விசாரணையின் போது வழக்குரைஞர் மூலம் தனது தரப்பை எடுத்துக் கூறுவதற்கான உரிமை கஸாபிற்கு மறுக்கப்பட்டது.
மும்பை தாக்குதல் வழக்கில் உயிருடன் பிடிக்கப்பட்ட ஒரே நபராக கருதப்படும் அஜ்மல் கஸாபிற்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனையை தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.