மால்டா/பங்குரா:கடந்த இரு தினங்களில் மேற்குவங்காள மாநிலத்தின் மால்டா, பங்குரா மாவட்டங்களில் மேலும் 19 குழந்தைகள் மரணமடைந்துள்ளனர்.
பங்குரா சம்மிலானி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 குழந்தைகளும், மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 9 குழந்தைகளும் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பங்குரா மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை 4 குழந்தைகளும், வியாழக்கிழமை 6 குழந்தைகளும் இறந்ததாக கல்லூரியின் கண்காணிப்பாளர் டாக்டர் பி. குன்டு தெரிவித்தார்.
மூளை வீக்கம், நிம்மோனியா, உடல் எடைக்குறைவு ஆகியன மரணத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. பிறந்து 15 தினங்களே ஆன குழந்தைகளும் இறந்தவர்களில் அடங்குவர் என மால்டா மருத்துவமனை துணை முதல்வர் டாக்டர்.எம்.எ.ரஷீத் கூறினார். இத்துடன் கடந்த 16 தினங்களில் மே.வங்க மருத்துவமனையில் குழந்தைகளின் மரண எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது