டெல்லி : 2ஜி வழக்கில் தொடர்புடைய அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஸ்பெக்ட்ரம் லைசென்களையும் உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
11 தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 லைசென்ஸ்களையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த 122 லைசென்ஸ்களில் 85 லைசென்ஸ்கள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
ரத்து செய்யப்பட்ட லைசென்ஸ்களில் டாடா நிறுவனத்தின் 3 லைசென்ஸ்களும், வீடியோகான் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், லூப் டெலிகாம் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், யூனிநார் நிறுவனத்தின் 22 லைசென்ஸ்களும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் 13 லைசென்ஸ்களும், சிஸ்டமா-ஸ்யாம் நிறுவனத்தின் 21 லைசென்ஸ்களும், எடிசலாட்-டிபி நிறுவனத்தின் 15 லைசென்ஸ்களும், எஸ் டெல் நிறுவனத்தின் 6 லைசென்ஸ்களும், ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் 9 லைசென்ஸ்களும் அடக்கம்.
இந்த அனைத்து லைசென்ஸ்களையும் ரத்து செய்யுமாறு மத்திய தொலைத் தொடர்புத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்குத் தொடர்பாக தன்னிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் மத்திய கண்காணிப்பு ஆணையத்திடம் (Central Vigilance Commission- CVC) ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த 122 லைசென்ஸ்களையும் ரூ. 9,000 கோடிக்கு விற்றார் ராசா. இதனால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மத்திய அரசின் கணக்குத் தணிக்கைத் துறை குற்றம் சாட்டியிருந்தது.
முறைகேடு விற்பனைக்கு அபராதம்
இந்நிலையில் முறைகேடாக 2ஜி லைசென்ஸ் பெற்றவுடன் தங்களது நிறுவன பங்குகளை அதிக விலைக்கு விற்று லாபமடைந்த 3 தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ், எஸ்டெல் ஆகியவை தலா ரூ.5 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே போல விதிகளை மீறிய லூப் டெலிகாம், ஸ்யாம் சிஸ்டமா ஆகியவை தலா ரூ. 50 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.
இந்த 5 நிறுவனங்கள் உள்பட முறைகேடாக லைசென்ஸ் பெற்ற அனைத்து நிறுவனங்களின் லைசென்ஸ்கள் அடுத்த 4 மாதங்களுக்கு மட்டுமே செல்லும்.
லைசென்ஸ் வினியோகம் புதிய விதிமுறைகளை தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் வகுக்க வேண்டும். புதிய விதிமுறைகளின் கீழ் 2ஜி லைசென்ஸ்களை மீண்டும் விற்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிபதிகள் கங்கூலி,சிங்வி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இந்தத் பரப்பரப்பு தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கில் தீர்ப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.