சென்னை : சென்னை மாநகரில் நடந்த வங்கிக் கொள்ளையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐந்து இளைஞர்கள் போலீஸாரின் என்கவுண்டரில் பலியானார்கள். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவன் உள்பட ஐந்துபேர் என்கவுண்டரில் பலியானார்கள். மோதலில் காயமடைந்த இரண்டு இன்ஸ்பெக்டர்கள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் முதன் முறையாக ஒரு போலீஸ் என்கவுண்டரில் அதிகமான நபர்கள் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில், கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் இம்மாதம் 20ம் தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில், 33 லட்சம் ரூபாய் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் படத்தை வெளியிட்டு, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி பேட்டியளித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் வண்டிக்காரன் தெருவி்ல் உள்ள வீடு ஒன்றில் இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது நள்ளிரவில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். இதை அறித்த நபர்கள் தப்பியோட நினைத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இதில் 5 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.
இந்த என்கவுண்டர் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் நள்ளிரவில் நடந்த என்கவுன்டர் தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் என போலீசார் தெரிவித்தனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட வடமாநில கொள்ளையர்கள் நேற்று இரவு தாங்கள் குடியிருக்கும் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் உள்ள வீட்டின் உரிமையாளரிடம் வாடகை பாக்கியினை கொடுத்துவிட்டு வீட்டை காலி செய்யப்போவதாக கூறியுள்ளனர். அப்போது இரவோடு இரவாக தப்பிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டின் உரிமையாளருக்கு இவர்கள் தான் கொள்ளையர்கள் என தெரியாது என போலீசார் கூறுகின்றனர். எனினும் அன்று இரவில் டி.வி.யில் கும்பல் தலைவனின் வீடியோ படம் வெளியானது . இதனை பார்த்த போது தான் அவர்கள் போலீசாரால் தேடப்படும் கொள்ளையர்கள் என்ற தகவல் தெரிந்தது. அதன் பின்னர் தான் போலீசாருக்கு கொள்ளையர்கள் தங்கியிருந்த விவரம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து என்கவுண்டர் ஆபரேசனில் போலீஸ் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சென்னை வேளச்சேரியில் நடந்த என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் வினோத்குமார், வினாய்குமார், ஹரீஷ் பிரசாத் , சகிகரே , அபேகுமார் உள்ளிட்ட 5 பேர் ஆவர். இதில் சகிகரே என்பவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், மற்றவர்கள் பீகார் மாநிலத்தவர் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
சென்னையில் துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்கப் பணமும், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் ஏராளமான பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் கொள்ளையர்களுக்கு யாருடனேனும் தொடர்புள்ளதாக என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.