இன்று நகரத்திலிருந்து கிராமம் வரை எங்கும் பறந்து, திரிந்து வாழும் ஒரு வகை பூச்சி இனம்தான் ஈக்கள். பொதுவாக ஈக்கள் என்றாலே எல்லோருக்கும் அருவெறுப்பு தான் தோன்றும். ஏனெனில், அவை மலம் மற்றும் குப்பைகளிலும் உட்கார்ந்து ... பிறகு, நம் உடலிலும், உண்ணும் உணவுகளின் மீதும் உட்காருவது தான். ஈக்களை முழுமையாக ஒழிக்க, சிறந்த வழி - சுகாதாரமே. அரசும் பல வழிகளில் முயற்சி செய்தும் ஈக்களின் எண்ணிக்கையோ குறைந்த பாடில்லை.
ஈக்களால் ஆண்டுக்கு பல லட்சம் பேர் பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள் பரவுவதற்கு ஈக்களே முக்கிய காரணியாக இருக்கின்றன.
பொதுவாகவே ஈக்கள் அழுகிப்போன காய்கறிகள் மீதும் மீன் கடைகள், கோழிப்பண்ணை, மாட்டுப்பண்ணை, மல ஜல கழிப்பறை, சுகாதாரம் குறைந்த குப்பைத்தொட்டிகள் போன்ற இடங்களில் மிகவசதியாக வாழ்கின்றன.
பெண் ஈ, ஒரு தடவைக்கு 80 முதல் 100 முட்டை கள் வரை இடுமாம். ஈக்கள், கொசுக்களைப் போல் நம் இரத்தத்தில் கலக்கக்கூடிய கொடிய நோய்க்கிருமிகளை சுமந்துக்கொண்டு அலைவதில்லை என்றாலும், உணவுப் பொருட்களின் மீது இலட்சக்கணக்கான பாக்டீரியாக்களை இறக்குமதி செய்யும் பணியை செவ்வனே செய்கின்றன என்பதே உண்மை! ஈக்களின் ஆறு கால்களிலும் அதன் உடலிலும் பல்லாயிரக்கணக்கான உரோமங்கள் உள்ளன. இதனுடைய ஒவ்வொரு காலிலும் வட்டமான, பிசின் போன்ற, ஒரு அமைப்பு உள்ளது. இந்த பிசின், ஒருவித பசை பொருளாகும். கழிவுகளின் மீது, ஈக்கள், உட்காரும்போது கழிவுகளிலுள்ள பாக்டீரியாக்கள் அந்த பிசின் போன்ற அமைப்பில் ஒட்டிக் கொள்கின்றன. ஈ, மீண்டும் நம் மீதோ அல்லது உணவின் மீதோ உட்காரும்போது அந்த பாக்டீரியாக்கள் வெகுஎளிதில் உணவில் கலந்து நம் உடலுக்குள் செல்கின்றன. இதன் விளைவால் வயிற்றுப்போக்கு, குடற்புழு, உட ல் நமைச்சல், தோல் எரிச்சல், வயிற்றுப்புண், டைபா ய்டு, தொற்றுக் கிருமிக் காய்ச்சல் என எண்ணிலடங்கா நோய்கள் நம்மை தாக்குகின்றன. 'நாங்கள் கொசுக்களுக்கு சளைத்தவர்கள் அல்ல' என்பதுபோல் ஈக்களும் தன்பங்கிற்கு ஏராளமான நோய்களைப் பரப்புகின்றன.
தற்போது தமிழகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும், கடற்கரை யோரத்தில் வாழும் மக்களும்தான் ஈக்களால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட இடங்களில் கோழிப்பண்ணைகள் அதிகம் இருப்பதால், அங்கு ஈக்களின் பெருக்கமும் தாக்கமும் மிக அதிகமாக உள்ளது. மற்றும் கடலோர மாவட்டங்களிலும் மீன்கள் விற்கப்படும் இடங்களிலும் ஈக்களின் உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது.
இப்படி பல வகைகளில் தொல்லைகொடுக்கும் ஈக்களிடமிருந்து நம்மையும், நாம் வாழும் சுற்றுசூழலையும் பாதுகாக்க சில நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது:
01. அழுகிய பொருட்களை உடனே அப்புறப்படுத்தி அப்பகுதியை தூய்மையாக வைத்திருத்தல். 02. அசைவ பொருள் கிடங்குகளின் கழிவுகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு, கிடங்குகளில் தூய்மையை பேணுதல். 03. வீடுகளைச் சுற்றியுள்ள குப்பைகளை தினமும் அகற்றுதல். 04. உணவுப் பொருட்கள் உட்பட எந்த பொருளையும் திறந்து வைப்பதை முற்றிலும் தவிர்த்தல். 05. வீடுகளில் குப்பைகளை சேர்த்துவைக்காமல் அடிக்கடி அப்புறப்படுத்தி விடுதல். 06. கோழிப்பண்ணை போன்ற இடங்களில் முழு சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது. (இதனால் ஈக்களை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தி, அழிக்கலாம்). 07. ஈக்களின் தொந்திரவு அதிகமாக இருந்தால், மஞ்சள் தூளை நீரில் கரைத்து அவைகள் அதிகம் உள்ள இடங்களில் தெளித்தால், ஈக்கள் உள்ளே வருவதை தவிர்ப்பதோடு, தொந்திரவிலிருந்தும் சற்று நிம்மதி பெறலாம். |