சென்னை:- சென்னையில் ஐந்து வங்கிக் கொள்ளையர்கள் போலீஸ் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 2 வங்கிககளில் பல லட்சம் பணத்தைத் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்ததாக கூறப்படும் வினோத்குமார் உள்ளிட்ட ஐந்து பேர் இன்று அதிகாலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து என்கவுண்டர் மூலம் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மின்கட்டணம், பால் விலை உயர்வு, மின்சார தடை ஆகிய பிரச்சனைகளால் மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ள தமிழக அரசும் மக்களின் கவனத்தை திசை திருப்ப இந்த என்கவுண்டரை பயன்படுத்திக் கொண்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேசமயம், இந்த என்கவுண்டரை மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இது சட்டவிரோதமான கொலை என்பதில் சந்தேகமில்லை. நேற்றுதான் ஒரு குற்றவாளியின் போட்டோவை சென்னை போலீஸ் கமிஷனர் காட்டி வெளியிட்டார். ஆனால் பத்து மணிநேரத்திற்குள் அந்த நபரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
மேலும், போலீஸ் கமிஷனர் நேற்று காட்டிய நபரைத் தவிர மேலும் நான்கு பேரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர்கள் குற்றவாளிகள் என்பது எப்படி நிரூபிக்கப்பட்டது. அவர்கள் உண்மையிலேயே குற்றவாளிகள்தானா என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை, நிரூபிக்கவில்லை.
மேலும், சம்பந்தப்பட்ட ஐந்து பேரும் தங்கியிருந்த வீடு என்பது குறுகலான சந்தில்தான் அமைந்துள்ளது. போலீஸார் பெருமளவில் அந்த இடத்தை முற்றுகையிட்டிருந்தனர். எனவே ஐந்து பேரும் நிச்சயம் தப்பி ஓட வாய்ப்பில்லை. அப்படி இருக்கையில் ஏன் என்கவுண்டர் செய்ய வேண்டும். அவர்களை உயிரோடு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி சட்டப்படியாகத்தான் தண்டித்திருக்க வேண்டும் என்று இவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் போலீஸாரோ, மக்கள் பாதுகாப்புக்காகவும், தங்களது சுய பாதுகாப்புக்காகவுமே சுட நேரிட்டதாக தெரிவித்துள்ளனர்.