சுவாமி விவேகானந்தர் அவர்கள் 110௦ ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரிக் கடலில் நீந்திச் சென்று அங்கிருந்த பாறையின் மீது அமர்ந்து 3 நாட்கள் தியானத்தில் இருந்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் கடலில் நீந்திக் கரை சேர்ந்த சுவாமி விவேகானந்தர் அவர்கள் சிகாகோ மாநாடு செல்வதற்குத் தீர்மானித்தார்.
சுவாமி விவேகானந்தர் பிறந்து 149 ஆண்டுகள் நிறைவுற்று 150௦ ஆவது பிறந்த வருடம் துவங்கியுள்ளது. சுவாமிஜியின் 150௦ ஆவது பிறந்த ஆண்டினை நாட்டிலுள்ள அனைத்து தேசபக்தர்கள், ஆன்மீகவாதிகள், துறவியர்கள், பல வகையில் கொண்டாடிடத் தீர்மானித்துள்ளனர். மத்திய மாநில அரசுகள் கூட சுவாமிஜியின் 150௦ வருடத்தினைக் கொண்டாடத் துவங்கியுள்ளன.
சுவாமி விவேகானந்தர் காட்டிய வழியில் சென்று அவர்கண்ட கனவினை நினைவாக்கிடவே ஆர்.எஸ்.எஸ். இயக்கம் துவங்கிய நாள் முதல் பாடுபட்டு வருகிறது. சுவாமிஜியின் 150௦ வருடத்தினை வருகின்ற 2013-14 ஆம் வருடங்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாடிடத் தீர்மானித்துள்ளது. அதன் துவக்கமாக சுவாமிஜி அவர்கள் தவமிருந்த குமரிமுனைக்கு அருகில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தின் எல்லையும் குமரி மாவட்டத்தின் எல்லையும் சந்திக்கும் இடமான காவல்கிணறு சந்திப்பிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கி.மீ. தூரத்தில் குமாரபுரம் என்னும் கிராமத்தில் இந்த பிரம்மாண்டமான ஆர்.எஸ்.எஸ்.சாங்கிக் வெற்றிகரமாக நடந்தது. குமாரபுரத்தில் இருக்கின்ற ராம்கோ நிறுவனத்தின் காற்றாலைப் பண்ணையில் (சுமார் 50௦ ஏக்கர் பரப்பில்) இந்நிகழ்ச்சி நடந்தது.
பிரமாண்டமான காற்றாலைகளுக்கு நடுவே குமரிக் கடலுக்கும் மகேந்த்ரகிரி என்னும் பெயருடன் புகழ் பெற்றுத் திகழும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையில் அழகிய பிரம்மாண்டமான மைதானத்தில் தென்தமிழக சங்க சாங்கிக் (கூடுதல்) நடந்தது. பொட்டல் காடாக இருந்த அவ்விடத்தை பெரும் தன்மையுடன் ராம்கோ நிறுவனத்தினர் இந்நிகழ்ச்சி நடத்திடத் தந்து உதவியதுடன் அந்த பிரம்மாண்டமான மைதானத்தில் வளர்ந்திருந்த செடி கொடிகளை அகற்றி மைதானத்தை சமன் செய்தும் கொடுத்து உதவினர்.
இந்நிகழ்ச்சியில் தென் தமிழகத்திலிருந்து மட்டும் சங்க சீருடை அணிந்த ஸ்வயம்சேவகர்கள் 16,906 பேர் கலந்துகொண்டனர். மேலும் இதில் துறவியர்கள், சான்றோர்கள், சங்க ஆதரவாளர்கள் மற்றும் தாய்மார்கள், சகோதரிகள், சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் 51, 699 பேர் கலந்து கொண்டனர். ஆகமொத்தம் சுமார் 70,000 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாபெரும் நிகழ்ச்சிக்காக எவ்விதமான விளம்பரமும் கிடையாது. சுவர் எழுத்து கிடையாது. பிரமாண்டமான சுவரொட்டிகள் இல்லை. துண்டுப் பிரசுரங்கள் கூடக் கிடையாது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் படம் கூட எங்கும் காணப்படவில்லை. கட் அவுட், ப்ளெக்ஸ் போர்டு எதுவும் எந்தத் தொண்டராலும் வைக்கப்படவில்லை. வழக்கம் போல் தமிழக தினசரிகள் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிப் பற்றி மாநில அளவில் எந்த செய்தியையும் பிரசுரம் செய்திடவில்லை. குமரி நெல்லை தூத்துக்குடிப் பகுதிகளில் மட்டும் இந்நிகழ்ச்சி நடைபெற இருப்பது பற்றி சில செய்திகள் நாளிதழ்களில் இடம் பெற்றன. இருந்த போதிலும் ஹிந்து சக்தி ஓங்கி வருவதை, ஹிந்துக்கள் திராவிட மாயையிலிருந்து விடுபட்டு வருவதையும் நடந்து முடிந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரம்மாண்டமான சாங்கிக் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து பங்கேற்றிட அவரவர்கள் தங்கள் சொந்த செலவில் பேருந்துகள் வேன்கள் கார்கள் வாயிலாக வந்தனர். மொத்தம் 2,948 வாகனங்களில் வந்திருந்தனர். அதில் 267 பருந்துகள் 1,930 வேன்கள் 320 கார்கள் 396 இரு சக்கர வாகனங்கள்.
மாற்றுத் திறனாளிகள் 21 பேர் சங்க சீருடை அணிந்து கொண்டு 18 வாகனங்களில் 3 சக்கர வாகனங்களில் 20 கி.மீ. தூரம் பயணம் செய்து இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் கோவை மதுரை பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். அவர்களும் சங்க சீருடை அணிந்து கொண்டு கலந்து கொண்டனர்.
அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த படி சரியாக மாலை 5 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு.மோகன் பாகவத் அவர்கள் விழா நடைபெறும் மைதானத்திற்குள் வந்தார். அவர் மைதானத்தின் கடைசிப் பகுதியில் இருந்து திறந்த ஜீப் ஒன்றில் வருகை புரிந்தார். அவருடன் ஜீப்பில் தலைமை வகித்த நீதிபதி அரு.ராமலிங்கம் ஆர்.எஸ்.எஸ்.தென் தமிழகத் தலைவர் ஆர்.வீ.எஸ்.மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
மாநாட்டு மேடை 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. மிகப் பிரம்மாண்ட மேடையில் ஒரு பக்கம் துறைவியர்கள் மற்றொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் அமர்ந்திருந்தனர். அருகில் வரவேற்புக் குழுவினருக்காக தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த முக்கிய நபர்கள் பலர் அமர்ந்திருந்தனர்.
மேடை 15 அடி உயரம் 105 அடி நீளம் 25 அடி அகலம் கொண்டிருந்தது. மேடைக்கு முன்பு அழகிய வண்ணக்கோலம் போடப்பட்டிருந்தது. அதை சங்க ஸ்வயம்சேவகர்கள் வீட்டுத் தாய்மார்கள் போட்டிருந்தனர்.
சங்கத்தின் மூத்த பிரசாரக் திரு.கே.சூரியநாராயண ராவ், தென் பாரத பிரசாரக் திரு.சேது மாதவன், கர்நாடக ஆந்திர மாநில பிரசாரக் திரு.ஜெயதேவ், அகில பாரத சேவா பிரமுக் திரு.சீதாராம் கேடிலய, சம்ஸ்கார் பாரதியின் அகில பாரத இணை அமைப்பாளர் திரு.பா.ரா.கிருஷ்ணமுர்த்தி, பா.ஜ.க.தேசிய இணை அமைப்பாளர் திரு.வீ.சதீஷ், தமிழக பா.ஜ.க.பிரமுகர் திரு.இல.கணேசன் ,பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், ஹிந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் திரு.இராம.கோபாலன், உட்பட சங்கத்தின் மற்ற அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பரமபூஜனீய சர் சங்க சாலக் மோகன் பாகவத் அவர்கள் ஹிந்தியில் ஆற்றிய சொற்பொழிவினை தென் பாரத ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணை அமைப்பாளர் திரு.கோ.ஸ்தாணுமாலயன் அவர்கள் தமிழாக்கம் செய்தார்.
துவக்கத்தில் சங்க ஸ்வயம் சேவகர்கள் அனைவரும் இணைந்து இந்த யுகம் இந்து யுகம் இணையில்லா சங்க யுகம் எனும் பாடலைப் பாடினர். அப்பாடலை அனைவரும் இணைந்து பாடியத்தை கேட்பதற்கு மிக அற்புதமாக இருந்தது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த முக்கிய சங்கப் ப்ரௌப்பளர்கள் வரவேற்புக் குழு உறுப்பினர்கள் சமுதாயத் தலைவர்கள் துறவியர்கள் உட்பட விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தென் தமிழக ஆர்.எஸ்.எஸ்.செயலாளர் திரு.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார். வரவேற்புக் குழுவின் செயலாளர் டாக்டர் ஸ்ரீநிவாசக் கண்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி இரவு 7 மணிக்கு நிறைவுற்றது.
கன்யாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற ஒரு ஷாகாவில் இருந்து மட்டும் (சங்கக் கிளை) 60 பேர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
திருச்சி மாநகரில் இருக்கின்ற 81 பஸ்திகளில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர்.
618 கிராமங்களில் இருந்து சங்க ஸ்வயம் சேவகர்கள் வந்திருந்தனர்.
மொத்தம் 2,542 கிராமங்களில் இருந்து நிகழ்ச்சிக்கு மக்கள் வந்திருந்தனர்.
3,469 புதிய ஸ்வயம் சேவகர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர்.
நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தருகில் மொத்தம் 2,948 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. எவ்விதமான இடையூறுகளும் இன்றி வாகனங்கள் சுமுகமாக வந்து சென்றன. அதைப் பார்த்துக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கோ பெரும் ஆச்சரியம். சங்க ஏற்பாட்டினை அவர்கள் பாராட்டினர்.
காவல் துறையினர் நூற்றுக் கணக்கில் பாதுகாவலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அங்கு எவ்வித வேலையும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இல்லை. உயர் அதிகாரிகள் உட்பட அனைவரும் சங்க நிகழ்ச்சிகள் எப்படி திட்டமிட்டபடி எவ்வித குழப்பமும் இன்றி குறிப்பிட்ட நேரத்தி துவங்கி நடைபெறுகிறது என்பதை கவனித்தனர்.
1,50,000 சதுர அடி நிலப்பரப்பில் சங்கஸ்தான் அமைந்திருந்தது.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு வழங்கிட 2 லட்சம் சப்பாத்திகள் 1 லட்சத்து 46 ஆயிரம் இட்லி தயாரிக்கப்பட்டது. 19 மணிநேரத்தில் வெறும் 8 பேர் மட்டும் இப்பணியில் ஈடுபட்டனர். இந்த இட்லி தயாரித்திட 606 கிலோ மாவு உபயோகப் படுத்தப்பட்டது. இது கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.
அதிக இட்லி தயாரித்து சாதனை படைத்தவர் கோவையைச் சேர்ந்த சமையல் ஒப்பந்தக்காரர் திரு.சரவண மாணிக்கம் ஆவார். இவரது சாதனையை அங்கீகரித்து Elite World Record அமைப்பின் பிரதிநிதி பாலநாக சாய்கிருஷ்ணன் அவர்கள் சான்றிதழ் வழங்கினார்.
அருகில் டாஸ்மாக் கடை இருந்தும் கூட நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஒருவர் கூட அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்று நிகழ்ச்சிக்கு வந்திருந்த தொலைகாட்சி நிருபர் ஒருவர் கூறினார்.
பல குடும்பத்தில் தாத்தா-பேரன்-மகன் என மூன்று தலைமுறையினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பா.ஜ.க.முன்னாள் எம்.எல்.ஏ. ஹெச் ராஜா, அவருடைய தந்தை யோகா மாஸ்டர் திரு.ஹரிஹரன், ஹெச் ராஜாவின் மகள் மற்றும் அவரது பேத்தி என 4 தலைமுறையினர் பங்கேற்றிருந்தனர்.
தமிழக ஆர்.எஸ்.எஸ். வரலாற்றில் இந்நிகழ்ச்சி ஒரு மைல் கல்லாகும். இதன் காரணமாக தமிழகத்தில் மேலும் சங்க சக்தி வலுப்பெறும்.