பாட்டியாலா : ஹரியானா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய ஐந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகளை போலீஸ் கைது செய்துள்ளது.
சாகர் என்ற ஆசாத், ஷாம் நிவாஸ், குர்ணாம்சிங், ப்ரவீண் சர்மா, ராஜேஷ்குமார் ஆகிய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மஸ்ஜிதுகள், மதரசாக்கள், இறைச்சி வெட்டுமிடங்கள் ஆகிய இடங்களில் 2009-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது தொடர்பான வழக்குகளில் போலீஸ் கைது செய்துள்ளது.
மேவாத்தில் ஸதக்பூரி கிராமத்தில் உள்ள இறைச்சி வெட்டுமிடம், மலாவ் மற்றும் ஜிந்தில் உள்ள மஸ்ஜித் ஆகிய இடங்களில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குண்டுகளை வைத்துள்ளனர். இதில் சாகர் என்ற ஆசாத் இக்குண்டுவெடிப்புகளின் முக்கிய சூத்திரதாரி ஆவான்.
பாறையை உடைக்கும் வேலைபார்க்கும் ராஜேஷ் குமார் என்பவன் வெடிப்பொருட்களை ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்துள்ளான். ஐந்து பேரிடமும் விசாரணை நடத்தியதில் குண்டுவைத்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக பாட்டியாலா போலீஸ் சூப்பிரண்ட் டி.பி.சிங் கூறியுள்ளார்.
குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய இன்னொரு ஹிந்துத்துவா தீவிரவாதி பவன்குமார் தலைமறைவாக உள்ளான்.
2010 ஆம் ஆண்டு நூஹில் குருகுல ஆசிரமத்தில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் சுவாமி ஆனந்த் மித்ரானந்த் என்பவரை போலீஸ் கைது செய்திருந்தது. இச்சம்பவத்தில் உயிரிழப்பு இல்லை. எனினும் ஆசிரம கட்டிடம் முற்றிலும் தகர்ந்துவிட்டது. குருகுலத்தில் ஆசிரியராக பணியாற்றியவர் ஆனந்த் மித்ரானந்த் என்பது குறிப்பிடத்தக்கது.