புதுடெல்லி : சம்ஜோதா எக்ஸ்பிரஸில் நான்கு பேர் சேர்ந்து வெடிக்குண்டை வைத்ததாக கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி கமால் சவுகான் தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.
நான்கு சூட்கேஸ்களில் வெடிக்குண்டு சம்ஜோதா ரெயில் வைக்கப்பட்டது. 68 பேரை பலிவாங்கிய குண்டுவெடிப்பை நிகழ்த்தியதில் தனக்கு குற்ற உணர்வு இல்லை என்று சவுகான் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.
சவுகான் அளித்த வாக்குமூலத்தின் சுருக்கம்:
‘வெடிக்குண்டுகளை அனைத்தையும் வேறொரு இடத்தில் இருந்து டெல்லிக்கு கொண்டுவந்தோம். மத்தியபிரதேச மாநிலம் பாங்க்லியில் வைத்து 2006-ஆம் ஆண்டு நான் உள்பட பலருக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டது. கொலைச் செய்யப்பட்ட சுனில்ஜோஷி பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தார். ஃபரீதாபாத்தைச் சார்ந்த 8 பேருக்கு 2006 மார்ச் மாதம் துப்பாக்கிச்சுடும் பயிற்சி வழங்கப்பட்டது.
நான், ராம்ஜி கல்சங்கரா, சுனில் ஜோஷி, சந்தீப் டாங்கே, லோகேஷ் சர்மா ஆகியோரும் பயிற்சி முகாமில் கலந்துகொண்டோம். சம்ஜோதாவில் வெடிக்குண்டை நிறுவ நான்கு தினங்களுக்கு முன்பாக 2007 பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தூரில் இருந்து லோகேஷ் சர்மா என்னை இந்தூர் ரெயில்வே நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
ரெயில்வே ஸ்டேசனில் லோகேஷ் சர்மா இரண்டு சூட்கேஸ்களுடன் நின்று கொண்டிருந்தார். அங்கிருந்து இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் நானும், லோகேஷும் டெல்லி ஹஸ்ரத் நிஜாமுத்தீன் ஸ்டேஷனை அடைந்தோம்.
ஸ்டேஷனில் இறங்கிய உடனே பழைய டெல்லி ஸ்டேஷனுக்கு சென்றோம். அங்கு டார்மிட்டரியில்(தங்குமிடம்) தங்கினோம். அன்று மாலை நாங்கள் சூட்கேஸ்களுடன் மீண்டும் பழைய டெல்லி ரெயில்வே ஸ்டேஷன் ப்ளாட்மிற்கு சென்றோம். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ஸ்டேஷனை அடைந்தபொழுது லோகேஷ் ஒரு சூட்கேசை கம்பார்ட்மெண்டில் வைத்துவிட்டு வந்தார். பின்னர் என்னிடமிருந்து சூட்கேசை வாங்கி வேறொரு கம்பார்ட்மெண்டில் வைத்து விட்டு வேகமாக திரும்பிவந்தார்.
இவ்வேளையில் எங்கள் குழுவில் இருந்து இதர இரண்டு நபர்கள் சூட்கேஸ்களுடன் ப்ளாட்ஃபாமில் நின்று கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களை அடையாளம் கண்டபோதிலும் பேசிக்கொள்ளவில்லை. வேகமாக நாங்கள் ஸ்டேஷனில் இருந்து கிளம்பிவிட்டோம்.’ இவ்வாறு சவுகான் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.
சவுகான் இதர இரண்டு நபர்களில் ஒருவர் நாஸிக்கை சார்ந்தவர் என்பதை தேசிய புலனாய்வு ஏஜன்சி கண்டுபிடித்துள்ளது. லோகேஷ் சர்மாவோ தற்போது சிறையில் உள்ளார். சுவாமி அஸிமானந்தா, சுனில்ஜோஷி, ராம்சந்திர கல்சங்கரா, சந்தீப் டாங்கே ஆகியோர் மீது தற்போது சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ஆவர். இவர்களில் கல்சங்கரா மற்றும் டாங்கே ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். சுனில் ஜோஷி கொலைச் செய்யப்பட்டார். அஸிமானந்தா சிறையில் உள்ளார்.
சவுகானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் லோகேஷ் சர்மாவை தேசிய புலனாய்வு ஏஜன்சி மீண்டும் விசாரணை செய்ய உள்ளது. இத்துடன் பழைய டெல்லி ஸ்டேஷனில் குண்டுவைத்த அன்றைய தின சி.சி.டி.வி காட்சி பதிவுகள் பரிசோதிக்கப்படும். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வைத்த நான்கு குண்டுகளில் 12,13 ஆகிய கம்பார்ட்மெண்டுகளில் வைத்த குண்டுகள் வெடித்துள்ளன. இதர இரண்டு சூட்கேஸ்களை போலீஸ் கண்டுபிடித்துவிட்டது. இதில் ஒன்றை செயலிழக்க செய்யும் வேளையில் வெடித்தது.