திருநெல்வேலி:கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடிய மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்த தமிழக அரசு அடக்குமுறையை ஏவியுள்ளது.
11 அணு மின் உலை எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூழலில் தமிழக அரசின் அராஜகத்தை எதிர்த்து போராடிய கூட்டப்புளி கிராம மக்கள் 178 பேரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளது. இதில் 45 பேர் பெண்கள். 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பாளை மத்திய சிறை அருகே இருக்கும் நிலையில் தொலைதூர சிறைகளில் அடைத்து மக்களின் வாழ்க்கையை அலைக்கழிக்கும் தமிழக ஜெயா அரசின் திட்டமே இதன் பின்னணியில் அமைந்துள்ளது.
இந்நிலையில் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் உதயகுமார் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். 3-வது நாளாக நீடிக்கும் அவரது உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து 500 க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.உதயகுமார் எப்பொழுதும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், நேற்றிரவு நாகர்கோவிலில் உள்ள உதயகுமாரின் பள்ளியை ரவுடிகள் சிலர் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். மக்கள் திரண்டுள்ள இடிந்தகரையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. படகில் சென்று அடுத்த ஊர்களிலிருந்து உணவுப் பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.
மருந்துக் கடைகளில் மருந்துகள் குறைந்து வருகின்றன. தேர்வு நேரத்தில் பிள்ளைகள் பள்ளி செல்ல இயலாத நிலை. குடி தண்ணீர்ப் பற்றாக்குறையும் உள்ளது. மக்களைப் பணிய வைத்து உதயகுமாரைச் சரணடைய வைப்போம் என ஒரு போலீஸ் அதிகாரி கொக்கரித்துள்ளார்.
இச்சூழலில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது: மக்கள் சுகாதார வசதி இன்றி தவிக்கின்றனர். இடிந்த கரையில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. முள்ளிவாய்க்கால் சம்பவம் போல இடிந்தகரையில் உள்ள தமிழர்களை கொத்து கொத்தாக கொலை செய்ய இந்த அரசுகள் முடிவு செய்துள்ளதா?
என்னை கைது செய்து சிறையில் அடைத்தாலும் சிறையிலும் உண்ணாவிரதத்தை தொடருவேன். நான் கைது செய்யப்படுவதைக் கண்டு பயப்படவில்லை. அரசுப் பணத்தை நான் திருடவில்லை. யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்கவில்லை. பின்னர் ஏன் நான் பயப்பட வேண்டும் என்று உதயகுமார் கூறினார்.