ஜித்தா : மஸ்ஜிதுல் ஹரமின் முற்றங்களில் புதிய மார்பிள்களை பதிக்கும் பணி துவங்கியுள்ளது. புனித பயணிகளுக்கு கூடுதல் ஆறுதலை அளிக்கும் விதமாக கோடை காலங்களில் சூட்டை தணித்து, சூரிய ஒளியை தடுக்கும் சக்தி வாய்ந்த மார்பிள்கள் பதிக்கப்படுகின்றன. கஃபாவை தவாப்(சுற்றுதல்) செய்யும் பகுதிகளில் பதித்துள்ளது போன்ற மார்பிள்கள் முற்றங்களிலும் பதிக்கவேண்டும் என்ற உத்தரவு அண்மையில் பிறப்பிக்கப்பட்டது.
கஃபாவின் மேற்கு பகுதிகளில் உள்ள முற்றங்களில் புதிய மார்பிள்களை பதிக்கும் பணி துவங்கியுள்ளது. இதர பகுதிகளிலும் பழைய மார்பிள்களை அகற்றிவிட்டு புதிய மார்பிள்கள் பதிக்கப்படும். என்ஜீனியர்கள், அதிகாரிகள், தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பழைய மார்பிள்களுக்கு பதிலாக புதிய மார்பிள்களை பதிக்கும்போது ஹரம் ஷரீஃபின் முற்றங்களில் இனி புனித பயணிகளுக்கு சூடு பற்றி கவலை இல்லாமல் அமரலாம்.
‘தாஸூஸ்’ என்ற பெயரிலான மார்பிள்கள் கிரீஸ் நாட்டில் இருந்து இறக்குமதிச் செய்யப்பட்டுள்ளது. 2.5 செண்டிமீட்டர் கன அளவைக் கொண்டது. இரண்டு ஹரம் ஷரீஃப்களில் பதிப்பதற்காக இவ்வகையான மார்பிள்களை இரு ஹரம் ஷரீஃப் அலுவலகம் வாங்கியுள்ளது. இரவில் ஈரப்பதத்தை ஈர்த்து பகலில் அதனை வெளியிடும் தன்மைக் கொண்டது இந்த மார்பிள்கள். இதனால் பகல் நேரத்தில் சூடு வெளிப்படாது.மேலும் ஹரமின் தெற்கு பகுதியில் அதான்(தொழுகைக்கான அழைப்பு) கொடுப்பதற்கான புதிய சவுண்ட் சிஸ்டம் புதிய இடத்திற்கு மாற்றும் பணிகளும், அதற்கு தேவையான தொழில்நுட்ப அமைப்புகளை நிறைவேற்றுவதும் நடந்துவருகிறது.