வியன்னா: ஃபலஸ்தீன் பிரதேசங்களில் இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்பு மையங்களை குறித்து விசாரணை நடத்தக்கோரும் தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ளது.
இஸ்ரேல் குடியிருப்புகளை கண்டித்து முதன்முதலாக ஒரு ஐ.நா ஏஜன்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
47 உறுப்பினர்களை கொண்ட மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்காவை தவிர 36 நாடுகளின் உறுப்பினர்களும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். 10 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.சட்டவிரோத குடியிருப்புகளை கட்டுவதை கண்டிக்கும் தீர்மானம் குடியேற்றவாசிகள் ஃபலஸ்தீன் மக்களுக்கு எதிராக நடத்தும் அக்கிரமங்களை தடுக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோருகிறது. சட்டவிரோத குடியிருப்புக்கள், ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் பிரதேச மக்களிடம் ஏற்படுத்திய விளைவுகளை குறித்து விசாரணை நடத்தக்கோரும் இத்தீர்மானம் குடியிருப்புக்களை விரிவுப்படுத்தும் இஸ்ரேலின் முடிவு சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்று குற்றம் சாட்டுகிறது.
குடியேற்றக் கொள்கையை மறுபரிசீலனைச் செய்ய இஸ்ரேல் தயாராகவேண்டும் என்றும் தீர்மானம் இஸ்ரேலுக்கு கோரிக்கை விடுக்கிறது.
இத்தீர்மானத்தை இஸ்ரேல் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளது. இத்தீர்மானம் ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் கபட நாடகத்தை நிரூபிப்பதாகவும், இஸ்ரேலுக்கு எதிரான எதிரி மனப்பாண்மையின் உதாரணம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.
அதேவேளையில் ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தி தொடர்பாளர் நபீல்அபூ ருதீனா தீர்மானத்தை வரவேற்றுள்ளார். அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னடைவாக இத்தீர்மானம் அமையும் என்று தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த அமெரிக்க பிரதிநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
கிழக்கு ஜெருசலத்திலும், மேற்குகரையிலும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.