லக்னோ:முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டத்தில் மத்திய அரசு தலையிடுவதற்கு முஸ்லிம் தனியார் சட்டவாரியம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மும்பையில் அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் 3 நாட்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் உரை நிகழ்த்திய முஸ்லிம் தனியார் சட்டவாரிய தலைவர்கள் பல்வேறு பிரச்சனைகளை குறித்து கருத்துக்களை வெளியிட்டனர்.
கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் உறுதி அளித்தபோதும் அதனை கடைப்பிடிக்கவில்லை என்று வாரியம் குற்றம் சாட்டியது.
வக்ஃப் போர்ட் சட்டத் திருத்த மசோதாவை கொண்டுவரும் பொழுது முன்னர் முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் அளித்த சிபாரிசுகளின் அடிப்படையில் அமையவேண்டும்.
மருத்துவமனைகளில் பிறப்பு ஆவணங்களை பெறுவதைப் போல மஸ்ஜிதுகளில் அளிக்கும் நிக்காஹ்(திருமண ஒப்பந்த) பதிவு ஆவணங்களை ஏற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தவேண்டும்.
சில மஸ்ஜிதுகளில் தொழுகை நடத்த ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா(இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித்துறை) ஏற்படுத்திய தடையை நீக்கவேண்டும். முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தை இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின்(சிமி) துணை அமைப்பு என்று அவதூறு பரப்பும் உளவுத்துறைகளின் முயற்சி கண்டனத்திற்குரியது என்று முஸ்லிம் தனியார் சட்டவாரிய துணைப் பொதுச் செயலாளர் அப்துற்றஹீம் குரைஷி கூறினார்.
முஸ்லிம் இளைஞர்களை மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிலும் இதர பொய் வழக்குகளிலும் சிக்கவைத்த அதே நிறுவனங்கள்தாம் முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் மீதும் கரியை பூசுவதாக குரைஷி குற்றம் சாட்டினார்.