தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி அறிந்துகொள்ள ஆன்லைன் மூலம் இலவசப் படிப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.
இந்திய
ஜனநாயக முறைப்படி அரசுத்துறை அலுவலகங்களில் மக்கள் தங்களுக்கு வேண்டிய
தகவல்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் கடந்த
2005ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது அனைவரும் அறிந்ததே. தகவல் அறியும்
உரிமைச் சட்டம் பற்றி பரவலாக அனைத்து தரப்பு மக்களிடத்திலும் விழிப்புணர்வு
இருப்பினும் அதை செயல்படுத்தும்போது ஏற்படும் சந்தேகங்களைப் போக்க
வழக்கறிஞர் அல்லது எவரேனும் ஒருவரின் உதவியை நாட வேண்டியுள்ளது. இதைக்
கருத்தில் கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மக்களிடையே
பிரபலப்படுத்தும் நோக்கில் 15 நாள் ஆன்லைன் சர்டிஃபிகேட் படிப்பை மத்திய
அரசு நடத்திவருகிறது.இது ஆங்கில மொழியில் நடைபெறும்.
இண்டர்நெட் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் இருந்தால்
இந்தியக் குடிமக்கள் யார் வேண்டுமானாலும் இந்தப் படிப்பை இலவசமாகப்
படிக்கலாம். தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆன்லைன் படிப்பை படிக்க http://rtiocc.cgg.gov.in/ login.do
என்ற இணைய முகவரிக்குச் சென்று தங்கள் சுயவிவரங்களைப் பதிவு செய்ய
வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மட்டுமே பதிவுகள் வரவேற்கப்படும்.
பின் தற்காலிகமாக பதிவுகள் நிறுத்தி வைக்கப்படும். கடைசியாக பதிவு
செய்தவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் குழு எண் (Batch
No.) கொடுத்து அவர்களுக்கென 15 நாட்கள் ஒதுக்கப்படும். இதில் முதல் 12
நாட்கள் படிப்பதற்காகவும் மீதமுள்ள 3 நாட்கள் ஆன்லைனில் தேர்வு
எழுதுவதற்காகவும் ஒதுக்கப்படும்.
அளிக்கப்பட்ட கடவுச் சொல்லைப் (Password)
பயன்படுத்தி ஒருவர் ஆன்லைன் மூலம் படிக்கலாம். தகவல் அறியும் உரிமைச்
சட்டம் பற்றி தகவல்கள் கொண்ட நான்கு தொகுதிகளைப் படிக்க வேண்டும்.
ஒவ்வொரு தொகுதியும் 3 அத்தியாயங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு
தொகுதியையும் படித்து முடித்தபின் அவற்றிலிருந்து க்விஸ் முறையில்
கேட்கப்படும் 10 கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். அதில் தேர்ச்சி
பெற்றால்தான் அடுத்த தொகுதியை தரவிறக்கம் செய்ய முடியும். தேர்ச்சி
பெறாவிட்டால் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். இவ்வாறு அனைத்து
தொகுதிகளையும் தரவிறக்கம் செய்து படிக்க வேண்டும். 12 நாட்களில் எப்போது
வேண்டுமானாலும் குறிப்பிட்டவருக்கு அளிக்கப்பட்ட கணக்கிற்குள் கடவுச்
சொல்லைப் பயன்படுத்தி படிக்கலாம்.
படிப்பதற்கு தரப்பட்டுள்ள தொகுதிகளுள் முதல் தொகுதி,
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய அறிமுகம் மற்றும் அதன் வரலாற்றைப்
பற்றி விளக்குகிறது. 1766-ஆம் ஆண்டிலேயே ஸ்வீடன் நாட்டில் தகவல் அறியும்
உரிமைச் சட்ட வடிவம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரமும்,
இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தோற்றம், அதன் சட்ட
வரையறைகள் போன்ற குறிப்பிடத்தக்க வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கியுள்ளது.
இரண்டாம் தொகுதி, தகவல் அளிக்கும் அதிகாரிகளின்
பொறுப்புகளைப் பற்றி விவரிக்கிறது. ஒவ்வொரு மாவட்ட வட்டார அளவில் உள்ள
‘உதவி பொதுத் தகவல் அதிகாரி’ தகவல் கோரும் விண்ணப்பங்களை பெறுவதற்கு
மட்டுமே அதிகாரம் பெற்றவர், அதை ‘பொதுத் தகவல் அதிகாரிக்கு’ 5
நாட்களுக்குள் அனுப்பி வைப்பார். அனைத்து அரசு நிர்வாகத் துறைகளில் உள்ள
குறிப்பிட்ட பொதுத் தகவல் அதிகாரி’ தகவல் கோரும் விண்ணப்பங்களை வாங்குவது
மற்றும் தகவல் அளிக்கும் உரிமை பெற்றவர்.
இவ்வாறு பின்வரும் தொகுதிகளில் தொடர்ச்சியாக
அடுத்தடுத்த தகவல்களை படிக்கக் கொடுக்கின்றனர். ‘பொதுத் தகவல் அதிகாரி’
கொடுத்த தகவல்கள் திருப்தி அளிக்காதபட்சத்தில் அவரது மேலதிகாரியான ‘முதல்
மேல்முறையீட்டு அதிகாரியிடம்’ மேல்முறையீடு செய்யலாம். இரண்டாவது
மேல்முறையீட்டின் மேல் 90 நாட்களுக்குள் பதிலளிக்க மத்திய/மாநில தகவல்
ஆணையம் கடமைப்பட்டுள்ளது.
தகவல் கோரும் செயல்முறைகளை தெளிவாக விளக்கி, சட்ட
நுணுக்கங்களை மிக எளிய வடிவில் படித்துத் தெரிந்துகொள்ள இந்த ஆன்லைன்
படிப்பு வழிவகை செய்கிறது. தரப்பட்டுள்ள தொகுதிகளை படித்து க்விஸ்
வினாக்களுக்கு தேடி விடை அளிக்கும்போதே இது சுய கற்றல் படிப்பு என்பது
விளங்கும். குறிப்பிட்ட குழுவில் (Batch) படிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
அந்த இணைய பக்கத்திலேயே கொடுக்கப்பட்ட விவாதப் பெட்டியில் ஆன்லைன்
படிப்பு பற்றிய அவர்களது சந்தேகங்களை முதல் 12 நாட்கள் மட்டும்
விவாதித்துக் கொள்ளலாம். அந்த விவாதக்களம் அவர்களுக்கு படிப்பிலும்
கைகொடுக்கும். கடைசி மூன்று நாட்கள் விவாதப்பெட்டி இருக்காது.
கடைசி மூன்று நாட்கள் ஆன்லைனில் தேர்வு எழுத வேண்டும்.
கேள்விகள் 13ம் நாளின் ஆரம்பத்திலேயே கொடுக்கப்பட்டுவிடும். மூன்று
நாட்கள் எப்போது வேண்டுமானாலும் குறிப்பிட்ட தேர்வர் கணக்கிற்குள்
நுழைந்து வெளியேறலாம். அப்படியானால் பார்த்து காப்பி பண்ணி எழுதலாம் என்ற
எண்ணம் தோன்றும். ஆனால் கேட்கப்படும் கேள்வி, நடைமுறை வாழ்க்கைக்கு
ஏற்றவாறு ஒரு சூழ்நிலை பற்றிக் கொடுத்து அதற்கு எவ்வாறு தகவல் அறியும்
உரிமைச் சட்டத்தில் தகவல் கோருவீர்கள் எனக் கேட்பார்கள். தேர்வர் அந்த
கேள்விக்கு விடை தேடும்போதே, எவ்வாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்
தகவல் கோரி விண்ணப்பிக்க வேண்டும், மேல்முறையீடு, விண்ணப்பிப்பதற்குரிய
அடிப்படைத் தகவல்கள் போன்றவைகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
உதரணமாக, உங்கள் நகரில் சாலைகள் மிக மோசமாக உள்ளது
எனக் கொடுத்து அ) தகவல் அறியும் உரிமைச் சட்ட்த்தில் யாரிடம் கேட்க
வேண்டுமென தெரியாது, என்ன செய்வீர்கள்.......... ஆ) தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தைப் பயன்படுத்தி அதை சரி செய்ய என்ன முயற்சி
எடுப்பீர்கள்............ போன்ற கேள்விகள் கேட்கப்படும். இதில் முதல்
கேள்விக்கு ஏதேனும் ஒரு துறைக்கு தகவல் கேட்டு விண்ணப்பிப்பேன், அவர்கள்
சட்டப்படி அதை சரியான துறையான நெடுஞ்சாலைகள் துறைக்கு கண்டிப்பாக அனுப்ப
வேண்டும் என்பதை மையமாக வைத்து மீதமுள்ள சரியான பதில் அமையும். இரண்டாம்
கேள்விக்கு, நெடுஞ்சாலைகள் துறை டிவிஷனல் என்ஜினீயரிடம் தகவல்கள் கோருவதாக
மேலதிக பதில்கள் அமையும்.
இறுதியாக தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆன்லைன்
சர்டிஃபிகேட் படிப்பு பற்றி தேர்வு எழுதியவரின் கருத்துகளை பதிவு செய்தபின்
படிப்பு நிறைவடைகிறது. சில நாட்களில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டபின்
மின்னஞ்சலில் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் சான்றிதழ் அனுப்பி
வைக்கப்படும்.
இணைய பயன்பாடு விண்ணை முட்டிக் கொண்டிருக்கும்
சூழ்நிலையில், இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் மிக எளிதாக இந்த
தகவல் அறியும் உரிமை சட்ட படிப்பை ஆன்லைன் மூலம் படிக்க முடியும்