புதுடெல்லி:ஹைதராபாத் பழைய நகரத்தில் நடந்த வகுப்பு கலவரம் இரு சமூகங்கள் இடையே வகுப்பு பிரிவினையை உருவாக்கி ஆதாயம் தேட முயன்ற ஹிந்துத்துவா சக்திகளின் சதித்திட்டம் என்று உண்மைக் கண்டறியும் குழுவின் அறிக்கை கூறுகிறது.
வகுப்புக் கலவரத்தின் மூலம் 2014-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆந்திரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் மக்களவை பொதுத் தேர்தலிலும் ஆதாயம் தேடுவதே ஹிந்துத்துவா சக்திகளின் நோக்கம் என்றும், கலவரத்திற்கான சதித்திட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கும் பங்குண்டு என்று அறிக்கை கூறுகிறது.
ஆந்திராவில் நடந்து வந்த தெலுங்கானா போராட்டமும், உயர் அதிகாரிகளும், அரசியல் கட்சிகளுக்கும் பங்குண்டு என்று கூறப்படும் பெரும் ஊழல்கள் வெளியானதும், ஆளுங்கட்சியில் உட்கட்சிப் போரை மூடி மறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும் இத்தகைய வகுப்புவாத வன்முறைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது.
ஹைதராபாத்தில் முன்னர் நடந்த கலவரங்களின் பின்னணியிலும் இத்தகைய சதித்திட்டங்கள் இருந்தது நிரூபணமாகியுள்ளது.
கடந்த சில வருடங்களாக தெலுங்கானா, ராயலசீமா பகுதிகளில் முஸ்லிம்-ஹிந்து சமுதாயங்களுக்கு இடையே வகுப்புவாத மோதலை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன.
மதனபேட், ஸைதாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இத்தகைய முயற்சிகள் கடந்த ஆண்டு தோல்வியை தழுவியது. இதற்கு பிறகு விசுவஹிந்து பரிஷத், ஹிந்து வாஹினி ஆகிய அமைப்புகள் கொந்தளிப்பை ஏற்படுத்தும் விதத்தில் முஸ்லிம் இளைஞர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டதாக போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இரவு நேரங்களில் முஸ்லிம்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதன் மூலம் முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்ட முயற்சிகள் நடந்தன.
இதன் தொடர்ச்சிதான் இம்மாதம் 8-ஆம் தேதி நடந்த வன்முறையும், கோயில் வளாகத்தில் பசு மாமிசத்தை வீசிவிட்டு முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட சம்பவமும் நிகழ்ந்தன. இந்த வன்முறையில் முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலங்கள் மீதும், முஸ்லிம் வீடுகள் மீதும் தாக்குதல் நடந்தன. வழக்கம் போலவே போலீசார் வன்முறையின் பேரில் 14 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தனர்.
அதேவேளையில் 28 ஹிந்து இளைஞர்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்ட போதிலும் அவர்கள் தலைமறைவாக உள்ளனர் என்று போலீஸ் கூறுகிறது. இவர்களை தேடி கண்டுபிடிப்பதற்கு பதிலாக கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மீதான வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்த போலீஸ் முனைப்புடன் செயல்படுகிறது. இது முதல் நோக்கிலேயே(prima facie) தெரியவருகிறது. போலீசின் இத்தகைய பாரபட்சமான போக்கு முஸ்லிம் சமுதாயத்திற்கு மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் மீதான பாரபட்சமற்ற நம்பிக்கையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆர்.எஸ்.எஸ், விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் மற்றும் ஹிந்து வாஹினியின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் இவர்கள் மூலம் வகுப்புவாத பிரச்சனைகள் உருவாவதை தடுத்து நிறுத்தவேண்டும்.
வகுப்புவாத கலவரத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். வெறுப்புணர்வை பரப்பும் வகுப்புவாத தலைவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
அதேவேளையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரு சமுதாயத்தினரும் நல்லிணக்கமான உறவை தொடர்கின்றனர். கொந்தளிப்பான பகுதிகளில் முதிர்ந்தவர்கள் விரும்பத்தகாத நிகழ்வுகளை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது