நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலை, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வலியுறுத்தி காஷ்மீரில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. சாலைகளில் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு படையினர் அதிகளவில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில், கடந்த மாதம் 9ஆம் தேதி அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு டெல்லி திகார் சிறைச்சாலையிலே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து, காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாத இயக்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.
மக்கள் ஜனநாயக கட்சியினர் அப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வலியுறுத்தி சட்டமன்றத்திற்குள் அரசுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். தூக்குத் தண்டனைக்கு பிறகு அப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தினருக்கு பெற்றுத்தர காஷ்மீர் அரசு தவறி விட்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர் , மாநிலத்தின் உரிமைகளை பெற தவறிவிட்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.