சமீபத்தில் இஸ்ரேல் அவர்கள் மேல் நடத்திய ஈன இரக்கமற்ற வான்வழித் தாக்குதலே இதற்குக் காரணம். இதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டார்கள். 70க்கும் மேற்பட்டோருக்குப் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
ஹிஷாம் அபூ ஹர்ப் என்ற 20 வயது சிறுவன் அப்படிக் கொல்லப்பட்டவர்களில் ஒருவன். எகிப்து-காஸா பகுதி சுரங்கத்தில் பணி புரிந்துகொண்டிருந்த பொழுது ஹிஷாம் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் தாக்குண்டு கொல்லப்பட்டான்.
அவனது குடும்பம் ரஃபா அகதிகள் முகாமில் ஒரு சிறிய குடிலில் வசித்து வருகின்றது. அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அவன் உழைத்து வந்தான்.
“இது என் வாழ்நாளில் மிக மோசமான ஈதாக இருக்கும். என் மகனைப் புத்தாடை அணிந்து நான் பார்க்க முடியாது. அவன் பிரியமாகத் திங்கும் தின்பண்டங்களை நான் ஈதுக்காக செய்து வைத்துள்ளேன். ஆனால் தின்பதற்கு அவன் இல்லை” என்று கண்ணீரோடு சொன்னார் ஹிஷாமின் தாய் பாத்திமா.
ஆனால் அந்தத் தாய் அத்தோடு இன்னொன்றையும் சொன்னார்: “அல்ஹம்துலில்லாஹ். என் மகன் யூதர்களின் கைகளால் கொல்லப்பட்டுள்ளான். ஆதலால் அவன் ஷஹீத் என்னும் அந்தஸ்தை அடைந்து தியாகிகளின் பட்டியலில் சேர்ந்து விட்டான்.”
“அவன் கடைசியாக வேலைக்குப் போகும்பொழுது அவனுடைய தம்பிமார்களுக்கு பொம்மைகளை வாங்கி வந்து அவர்களை ஆச்சரியப்படுத்தப் போவதாகக் கூறினான். ஆனால் அவனும் வரவில்லை. பொம்மைகளும் வரவில்லை” என்று அந்தத் தாய் பரிதாபமாகக் கூறினார்.
ஈத் எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தாலும் ஃபலஸ்தீனர்கள் சோகத்துடனேயே அதனை வரவேற்கிறார்கள்.