மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ள மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் விரைவில்
'பஷிம் பங்கா' என மாற்றம் செய்யப்படவிருக்கிறது.பங்களா, பங்களா பூமி, பஷிம் பங்கா உள்ளிட்ட பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் 'பசிம் பங்கா' (Pashchimbanga) எனும் பெயரை மாநில அரசும், எதிர்க்கட்சிகளும் ஏகமனதாக தெரிவு செய்தன.
இதையடுத்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு விடப்படவுள்ள இப்பெயர் மாற்றம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. ஆங்கில அகர வரிசையில் மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் கடைசியாக (West Bengal) உள்ளது. இது மாநிலத்திற்கு மிகவும் பின்னடைவாக உள்ளது. எனவே நிர்வாக காரணங்களுக்காக மாநிலத்தின் பெயரை மாற்ற முடிவு செய்துள்ளோம் என மேற்கு வங்க பாராளுமன்ற விவகார அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி தெரிவித்தார்.
சமீபத்தில் ஒரிசா மாநிலத்தின் பெயரும் ஒடிஷா என மாற்றப்பட்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் பாண்டிச்சேரி புதுச்சேரி எனவும், மெட்ராஸ் சென்னையாகவும் மாற்றம் பெற்றன.