நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 1 செப்டம்பர், 2011

போலி என்கவுண்டர் செய்பவர்களுக்கு தூக்குதண்டனை! உச்ச நீதிமன்றம்

சென்னை: தப்பியோடும் குற்றவாளிகளை சுட்டுக்கொல்கிறோம் என்ற பெயரில் தற்போது பல அப்பாவிகளை காவல்துறையினர் என்கவுண்டர் என்ற பெயரால் போட்டுத் தள்ளுகின்றனர் இப்படி “போலி என்கவுன்டர் செய்யும் காவல்துறையினர் தூக்குத் தண்டனைக்கு தகுதியானவர்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டே கட்ஜூ கூறியுள்ளார். 

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், ‘அரசியல் சாசன நடைமுறைகள்’ என்ற தலைப்பில் நேற்று பயிலரங்கம் நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டே கட்ஜூ பேசியதாவது: அரசியலமைப்பு என்பது எல்லா சமூகத்துக்கும் பொதுவானது. அரசியலமைப்பின் முதல் நோக்கமே அதிகாரத்தை ஏற்படுத்துவது. இரண்டாவது அதற்கு கட்டுப்பாடு விதிப்பது. இந்திய அரசியலமைப்புதான் உலகத்திலேயே மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.



இந்தியாவில் பலவகையான மொழி பேசுபவர்கள், கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள் என்று ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. எல்லாருக்கும் சம மரியாதை கொடுக்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு உள்ளது. 


இந்தியா, பாகிஸ்தான் பிரிவு ஏற்படும்போது இந்து, முஸ்லிம் மக்களிடையே பெரிய கலவரமே வந்தது. ஆனால், அப்போது பிரதமர் நேரு, ‘இந்தியா இந்துக்களின் நாடு அல்ல; மதச்சார்பற்ற நாடு’ என்று கூறினார். சமூக அளவிலான அடித்தளம்தான் இந்தியாவை மிகவும் வேகமாக முன்னேறும் நாடாக மாற்றியுள்ளது. அதனால்தான், இந்தியாவில் எந்தப் பொருள் எங்கு உற்பத்தி செய்யப்பட்டாலும் எல்லா இடங்களிலும் விற்பனை செய்ய முடிகிறது. இருந்தாலும் இந்தியா இன்னும் ஏழை நாடாகவே உள்ளது. இங்கு 77 சதவீத மக்கள் இன்னும் ஏழைகளாகவே உள்ளனர். 


இந்தியாவை நவீன தொழில் முன்னேற்றங்களைக் கொண்டு வந்து உலக அளவில் சக்திவாய்ந்த நாடாக மாற்ற வேண்டும். 6 கோடி மக்கள் தொகை கொண்ட இங்கிலாந்தும், பிரான்சும் ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ளன. ஆனால், 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு அந்த கவுன்சிலில் இடம் இல்லை. அதற்கு முக்கிய காரணம் நாம் ஏழைகள் என்பதுதான். பிரான்சில் ஏற்பட்ட தொழில் புரட்சியால் அந்த நாடு முன்னேறிய நாடாகியது. அந்த நிலைக்கு நாமும் சென்றுக் கொண்டிருக்கிறோம். 


இந்தியாவில் நீதித்துறை மிகவும் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. உலக அளவில் இந்தியாவில்தான் நீதிபதிகள் சுதந்திரமாக பணியாற்றி வருகிறார்கள். போலி என்கவுன்டர் என்பது ஏற்க முடியாது. ஒருவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களைக் காட்ட முடியாததால், ஏதாவது ஒரு இடத்துக்கு கூட்டிப்போய் என்கவுன்டர் செய்கிறார்கள். அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது இந்த செயல். தண்டனை பெற்றுத் தர நீதிமன்றம் இருக்கும்போது, இதுபோன்ற செயல்களில் போலீசார் ஈடுபடுகின்றனர். 


மக்களுக்குப் பாதுகாப்பு தருவதுதான் போலீசாரின் கடமை. பொதுமக்களை கொலை செய்வதல்ல. போலி என்கவுன்டர் செய்பவர்கள் தூக்கு தண்டணைக்கு தகுதியானவர்கள். வட மாநிலங்களில் பல இடங்களில் கவுரவக் கொலை நடந்து வருகிறது. கவுரவம் என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமாக வன்முறையில் ஈடுபடுவது, கொலை செய்வது ஆகியவை மிகவும் கண்டிக்கத்தக்கது. 



இந்தியாவில் 30 லட்சம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வறுமைதான் அவர்களை மாற்றியுள்ளது. அவர்கள் வாழ்க்கைப் பாதையை மாற்ற வேண்டும். இந்தியாவில் சட்டக் கல்லூரியில் ஏட்டளவில் மட்டுமே பாடம் கற்றுத்தரப்படுகிறது. இது, இளைஞர்களுக்கு எதிராக செய்யப்படும் குற்றமாகும். செய்முறை பயிற்சி மிகவும் அவசியம். அவர்களுக்கு உள்ள பாடத்திட்டத்தில் மாற்றம் வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.