அஹ்மதாபாத் : கோத்ர ரெயில் எரிப்பு மற்றும் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பாக நரேந்திரமோடி அரசின் முன்னாள் அமைச்சர் எ.கே.ஜடேஜாவிடம் குறுக்கு விசாரணை நடத்த நானாவதி கமிஷன் அனுமதி அளித்துள்ளது.
கடந்த வாரம் கமிஷனின் முன்பு ஆஜரான ஜடேஜாவை விசாரணை செய்வதை எதிர்த்த மாநில அரசு பதில் அளிக்க கால அவகாசம் கோரியிருந்தது. ஜடேஜாவை விசாரணை செய்ய கோரி காங்கிரஸ்
கட்சியும், அரசு சாரா அமைப்பான ஜனசங்கர்ஷ் மஞ்சும்(ஜெ.எஸ்.எம்) அளித்த மனுவை கடந்தவாரம் ஓய்வு பெற்ற நீதிபதிகளான ஜி.டி.நானாவதி, அக்ஷய் மேஹ்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பரிசீலித்தது. இரு தரப்பினரின் வாதத்தை கேட்ட கமிஷன் அடுத்தவாரம் மனுவில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தது.எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமெனில் மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுக்கும் வேளையில் அதனை அறிவிக்க அரசு வழக்கறிஞர் போமி சேத்னாவுக்கு கமிஷன் தெரிவித்தது. அரசு வாதம் கேட்கும் தினத்தில் ஜடேஜாவை அழைக்கவும், வாதம் நிராகரிக்கப்பட்டால் அன்றைய தினமே காங்கிரஸ் மற்றும் ஜெ.எஸ்.எம்முக்கு ஜடேஜாவை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி வழங்கப்படும் எனவும் கமிஷன் தெரிவித்துள்ளது.
நகர வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்த ஜடேஜா கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ருவரி 27-ஆம் தேதி இரவு நரேந்திரமோடி அழைத்த கூட்டத்தில் கலந்துக் கொண்டார் என்பதால் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தவேண்டும் என ஜெ.எஸ்.எம்மிற்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் சின்ஹா வாதிட்டார்.
முஸ்லிம் இனப்படுகொலையின் போது ஹிந்துக்களுக்கு அவர்களின் கோபத்தை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்க வேண்டும் என நரேந்திரமோடி தான் அழைத்த முக்கிய கூட்டத்தில் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் என மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
முஸ்லிம் இனப் படுகொலையில் சாட்சியாக கமிஷன் விசாரணை நடத்திய 2-வது அமைச்சர்தான் ஜடேஜா. இம்மாதம் எட்டாம் தேதி நானாவதி கமிஷன் ஜடேஜாவிடம் விசாரணை நடத்தியது. முஸ்லிம் இனப்படுகொலையின் போது உள்துறை அமைச்சராக பதவி வகித்த ஸதாஃபியிடம் முன்னர் விசாரணை நடத்தப்பட்டது. பா.ஜ.கவின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மகா குஜராத் ஜனதா கட்சி என்ற கட்சியை உருவாக்கி செயல்பட்டு வருகிறார் ஸதாஃபி.