தீர்மானங்கள்:
1. கடந்த நவம்பர் 6ஆம் தேதி நள்ளிரவில் திருப்பூரில் கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்துள்ளார்கள். வெள்ளம் ஏற்பட்ட சமயத்திலிருந்தே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மீட்பு பணியில் இறங்கினர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு 60,000 உணவு பொட்டலங்கள் வரை விநியோகிக்கப்பட்டுள்ளது. இவ்வெள்ளத்தில் பல நூற்றுக்கணக்கான வீடுகள் முற்றிலும் வெள்ளத்தில் சேதமடைந்தும் பல வீடுகள் சுவர் இடிந்தது போன்ற பலத்த சேதமடைந்துள்ளது. அவர்கள் அனைவரது வியாபாரம் மற்றும் வாழ்வாதாரம் முற்றாக நசிந்துள்ள நிலையில் அம்மக்களுக்கு உதவும் பொருட்டு வருகின்ற வெள்ளிக்கிழமை தொழுகயில் தமிழகமெங்கும் அனைத்து மசூதிகளிலும் நிவாரண நிதி திரட்டி உதவி வழங்குவது என தீர்மானிக்கபட்டது.
2. நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடான சமூக நீதி இன்று கானல் நீராகிவிட்ட சூழ்நிலையில் தேசிய அளவில் மக்களுக்கு சமூக நீதியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வருகின்ற 26 மற்றும் 27 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லியில் சமூக நீதி மாநாடு ஒன்றை நடத்தவுள்ளது. இம்மாநாட்டிற்கான பிரச்சாரங்கள் தமிழகமெங்கும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி கோவையில் ஒரு பாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
3. 60 ஆண்டுகளாக நடந்து வந்த பாபரி மஸ்ஜித் நில வழக்கில் வெறுமனே மத நம்பிக்கையின் அடிப்படையில் கடந்த செப்.30, 2010 ஆம் தேதி நிலத்தை மனுதாரர்களுக்கு பிரித்து வழங்கி அலஹாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் நிலுவையில் இருக்கும் சூழ்நிலையில் வருகின்ற டிசம்பர்-6 ஆம் தேதி மாநிலத்தில் பல இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த "பாபரி மஸ்ஜித் மீட்பு - ஓர் வரலாற்று கடமை" என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் நோட்டீஸ் பிரச்சாரம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
4. கடந்த நவம்பர் 8 ஆம் தேதி மக்கள் நல பணியாளர்கள் சுமார் 13,000 பேர் தமிழக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்வதுடன் தங்கள் பணியை இழந்து சிரமப்படும் அம்மக்களின் வாழ்வாதாரங்களுக்கு வழிவகை செய்ய தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்டின் செயற்குழு கேட்டுக்கொள்கிறது